பெண்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்: 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் உள்ள 45 அடி சாலையில் அமைந்துள்ள ஜே.ஜே ஹப்பில், லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவரும் காமராஜ் நகர் தொகுதி எம்.எல்.ஏவுமான ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களின் அறிவுறுத்தலின்படி மகளிருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் டாலி கணக்கியல் சேவை, டேட்டா ஆப்ரேட்டர் பயிற்சி, இணையதள வடிவமைப்பு, அழகு கலை மற்றும் மேக்கப் சேவைகள், தையல் கலை மற்றும் பேஷன் டிசைனிங், பேக்கிங் மற்றும் கேக் தயாரிப்பு, நக வடிவமைப்பு மற்றும் நக பராமரிப்பு, ஆபரணம் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளுக்கான நேர்காணல்கள் நடத்தப்பட்டன.
நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். பயிற்சியில் சேரும் பெண்களுக்கு, பயிற்சி முடிந்த பின் வங்கிகள் மூலம் கடன் உதவி பெற்று சிறு தொழில் தொடங்குவதற்கான உதவிகளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
புதுச்சேரியில் முதன்முறையாக காமராஜ் நகர் தொகுதியில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காமராஜ் நகர் தொகுதியை மட்டும் அல்லாமல், புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
இந்த முயற்சிக்காக, லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவரும் காமராஜ் நகர் தொகுதி எம்.எல்.ஏவுமான ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களுக்கு கலந்து கொண்ட பெண்கள் நன்றியும் பாராட்டுகளும் தெரிவித்தனர்.

