ஒரே நபரை திருமணம் செய்த மூன்று சகோதரிகள்! உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பு

உத்தரப் பிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று சகோதரிகள், ஒரே நபரை திருமணம் செய்து கொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருமணத்திற்குப் பிறகு மூவரும் பிரிந்து வாழ்வதை நினைத்துக்கூட பார்க்க முடியாததால் இந்த முடிவை எடுத்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த திருமண நிகழ்வின் காணொளிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

ஹசன்பூரின் தௌரியா கிராமத்தைச் சேர்ந்த சகோதரிகளான சரோஜ் (20), சாவித்திரி (19), சந்தோஷ் (18) ஆகியோர் சமூக வலைதளங்களில் காணொளிகளை பதிவிட்டு வரும் உள்ளடக்க உருவாக்குநர்கள். இவர்கள் மூவரும் விகாஸ் என்ற ஒளிப்பதிவாளரை திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இந்த திருமண நிகழ்வில் இரு தரப்பு குடும்பத்தினரும் பங்கேற்கவில்லை.

ஒரே நபரை திருமணம் செய்துகொள்ள முடிவு எடுத்ததற்கான காரணத்தை விளக்கிய சரோஜ், “நாங்கள் வாழ்நாள் முழுவதும் ஒன்றாகவே இருந்தோம். எங்களை தனித்தனியாக திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் திட்டமிட்டதை அறிந்தபோது மிகுந்த மனவேதனை அடைந்தோம். அதனால் பிரியாமல் ஒன்றாக வாழ இந்த முடிவை எடுத்தோம்” என்று கூறியுள்ளார்.

விகாஸ் கடந்த ஆறு மாதங்களாக அவர்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்துள்ளார். மேலும், அவர்கள் இணைந்து உருவாக்கிய சமூக வலைதளக் காணொளிகளில் பெரும்பாலும் கணவர் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

இதுகுறித்து விகாஸ் கூறுகையில், “அந்த மூன்று சகோதரிகளும் ஒருவருக்கொருவர் எவ்வளவு ஆழமான பாசப்பிணைப்புடன் இருந்தார்கள் என்பது எனக்குத் தெரியும். திருமணத்திற்குப் பிறகு பிரிந்து வாழ விரும்பவில்லை என்று அவர்கள் பலமுறை என்னிடம் தெரிவித்தனர். அவர்களின் விருப்பத்தையும் உணர்வுகளையும் மதித்து, அவர்கள் ஒன்றாகவே வாழ வேண்டும் என்பதற்காக அவர்களைத் திருமணம் செய்துகொள்ள சம்மதித்தேன்” என்றார்.

இவர்களின் திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், அந்த சகோதரிகள் மற்றொரு காணொளியை வெளியிட்டு தங்கள் முடிவை நியாயப்படுத்தியுள்ளனர்.

அந்த காணொளியில், “பண்டைய காலத்தில் தசரத மன்னருக்கு மூன்று ராணிகள் இருந்தனர். அப்போது அது அவமானமாகக் கருதப்பட்டதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *