“கொடுத்ததெல்லாம் கொடுத்தார்…” CM விஜய்க்கு பாடல் மூலம் நன்றி சொன்ன தவெக எம்.எல்.ஏ. சிந்து!
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்புக்கு தவெக எம்.எல்.ஏ. சிந்து பாடல் பாடி நன்றி தெரிவித்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது.
சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு வாகனம் வழங்க வேண்டும் என்றும், அலுவலகப் பணிகளுக்காக உதவியாளர் நியமிக்க நிதி ஒதுக்க வேண்டும் என்றும் கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி விசிக எம்.எல்.ஏ. ஜோதிமணி கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த நிலையில், ஆகஸ்ட் 15-ம் தேதி விதி 110-ன் கீழ் பேசிய முதல்வர் விஜய், அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் வாகனம் வழங்கப்படும் என அறிவித்தார். வாகன ஓட்டுநர், எரிபொருள் மற்றும் பராமரிப்பு செலவுகளுக்காக மாதந்தோறும் ரூ.75,000 வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அதேபோல், அலுவலகப் பணிகளுக்காக உதவியாளர் ஒருவரை நியமித்துக்கொள்ள மாதந்தோறும் ரூ.25,000 உதவியாளர் படியாக வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
இதையடுத்து முதல்வருக்கு பல்வேறு எம்.எல்.ஏ.க்களும் நன்றி தெரிவித்தனர். அப்போது குடியாத்தம் தொகுதி தவெக எம்.எல்.ஏ. சிந்து, எம்.ஜி.ஆர். நடித்த படத்தின் பிரபல பாடல் வரிகளை பாடி முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்.
“கொடுத்ததெல்லாம் கொடுத்தார்.. இவர் யாருக்காகக் கொடுத்தார்.. ஒருத்தருக்கா கொடுத்தார்.. இல்லை ஊருக்காகக் கொடுத்தார்…” என சிந்து பாடியபோது, முதல்வர் விஜய் புன்னகையுடன் ரசித்துக் கேட்டார்.
கோரிக்கை வைக்கப்பட்ட சில நாட்களிலேயே அதற்கான அறிவிப்பு வெளியான நிலையில், சட்டப்பேரவையில் பாடல் மூலம் எம்.எல்.ஏ. சிந்து நன்றி தெரிவித்த சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

