“தோல்வி நிரந்தரமில்லை.. Comeback கொடுப்பதில் நாம் Specialist!” – மு.க.ஸ்டாலின்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக செயற்குழுக் கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியின் தேர்தல் தோல்வி, நிர்வாக மாற்றங்கள் மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து விரிவாக பேசினார்.

“நாம் பார்க்காத வெற்றியும் இல்லை; பார்க்காத தோல்வியும் இல்லை. தேர்தலில் தான் தோல்வி அடைந்திருக்கிறோமே தவிர, நிரந்தரமாக இல்லை” என்று கூறிய ஸ்டாலின், இந்தத் தோல்வியை கட்சியின் எதிர்காலத்தை திட்டமிட கிடைத்த கால அவகாசமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

தேர்தல் தோல்விக்கு பல காரணங்கள் இருந்தாலும், நிர்வாகிகளின் செயல்பாடுகளும் ஒரு காரணம் என்பதை மறைக்கத் தேவையில்லை என்றும், கட்சியினர் தங்களது தவறுகளை முதலில் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஒவ்வொரு தொகுதியிலும் தனித்தனியாக நிர்வாகிகளை மாற்றுவதைவிட, கட்சியில் முழுமையான சுய பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிவித்த அவர், அதன் அடிப்படையில் நிர்வாக அமைப்பில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக கூறினார்.

தேர்தல் தோல்விக்குப் பிறகு 38 பேர் கொண்ட கள ஆய்வுக் குழு அமைக்கப்பட்டதாகவும், தொகுதி வாரியாக நிர்வாகிகளிடம் கருத்துகள் பெறப்பட்டதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், தனியாக இணையதளம் மூலமாகவும் ஆயிரக்கணக்கான கருத்துகள் பெறப்பட்டு, அவற்றை முழுமையாக ஆய்வு செய்ததாக கூறினார்.

இதன் அடிப்படையில் தங்கம் தென்னரசு தலைமையில் மறுசீரமைப்புக் குழு அமைக்கப்பட்டதாகவும், அந்தக் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் கட்சியில் முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

இளைஞர்கள் மற்றும் பெண்களின் நம்பிக்கையை மீண்டும் பெறும் வகையில் கட்சியின் நடவடிக்கைகள் அமைய வேண்டும் எனக் கூறிய ஸ்டாலின், இனி வரும் நிர்வாகிகளின் பொறுப்புகளுக்கு ஏற்ப வயது வரம்பு மற்றும் பதவிக்காலம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், புதுமுகங்களுக்கு அதிக பொறுப்புகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

விரைவில் புதிய உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி, அதன்பிறகு அனைத்து மட்டங்களிலும் உட்கட்சித் தேர்தலை முறையாக நடத்த உள்ளதாகவும் கூறினார். நியமனங்களை விட தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படும் நிர்வாகிகள் சிறப்பாக செயல்படுவார்கள் என்ற நம்பிக்கையும் தனக்கு இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், கட்சிக்குள் உள்ள நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் அரவணைத்து செயல்பட வேண்டும் என்றும், ஒரு மாவட்டச் செயலாளர் அல்லது ஒரு எம்.எல்.ஏ. மட்டும் வலிமையாக இருப்பதால் கட்சியை வளர்க்க முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.

“ஒவ்வொரு தொண்டனும் ஒரு நிர்வாகியாக செயல்படும்போதுதான் இயக்கம் வளரும்” என்று கூறிய ஸ்டாலின், இளைஞர்களை மூத்த நிர்வாகிகள் வரவேற்று வழிநடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

திமுகவை மற்ற கட்சிகளைப் போல தேர்தலுக்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் செயல்படும் கட்சியாக நடத்த முடியாது என்றும், மக்கள் நலனுக்காக தொடர்ந்து போராடும் இயக்கமாக திமுக செயல்படும் என்றும் அவர் கூறினார்.

குறிப்பாக, “ஒரு தேர்தலில் தோற்றால் அடுத்த தேர்தல் வரும் வரை தூங்கி வழிவதுதான் மற்ற கட்சிகளின் வழக்கம். ஆனால் எதிர்க்கட்சியாக இருந்தாலும் சுணங்காமல் மக்கள் நலனுக்காக செயல்படும் கட்சி திமுக. Comeback கொடுப்பதில் நாம் Specialist! சிறப்பாகக் கொடுப்போம்” என்று ஸ்டாலின் பேசினார்.

கடந்த முறை திமுக ஆட்சிக்கு வந்தபோது வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்து நல்லாட்சி வழங்கியதாக குறிப்பிட்ட அவர், தற்போது தோல்வியடைந்திருந்தாலும் திமுகவுக்கு வாக்களிக்காத மக்களுக்காகவும் தொடர்ந்து போராடுவோம் என்றார்.

இறுதியாக, கட்சியினர் முதலில் தங்கள் குடும்பம், உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் அரசியல் கருத்துகளை கொண்டு செல்ல வேண்டும் என்றும், அதிகளவில் புதிய உடன்பிறப்புகளை கட்சியில் இணைத்து இயக்கத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *