‘ஜனநாயகன்’ படத்தில் விஜய் சொன்ன ‘குட் டச், பேட் டச்’… 8 வயது சிறுமி தெரிவித்த அதிர்ச்சி தகவல்!
‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘குட் டச், பேட் டச்’ குறித்த விழிப்புணர்வு காட்சி, சென்னையைச் சேர்ந்த 8 வயது சிறுமி தனக்கு நேர்ந்ததாகக் கூறப்படும் பாலியல் அத்துமீறல் குறித்து பெற்றோரிடம் தெரிவிக்க காரணமாக அமைந்துள்ளது.
சென்னை கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி, தனியார் பள்ளி ஒன்றில் 2ஆம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமியின் பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 மாதங்களாகப் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. சிறுமி தனது தந்தையுடன் வசித்து வந்த நிலையில், அவரது தாய் அவ்வப்போது குழந்தைகளைச் சந்தித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த ஜூலை 30ஆம் தேதி சிறுமியின் தந்தை தனது இரு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைப் பார்க்கச் சென்றுள்ளார்.
படத்தைப் பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிய சிறுமி, தனது தந்தையிடம் தனியாக ஒரு விஷயம் பேச வேண்டும் என்றும், தன்னை திட்டக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
அப்போது, படத்தில் விஜய் கூறிய ‘குட் டச், பேட் டச்’ விழிப்புணர்வு காட்சியை நினைவுகூர்ந்த சிறுமி, தனது தாய் பணிபுரியும் வீட்டில் உள்ள பெரியன் என்பவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக தந்தையிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மகள் கூறிய தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தந்தை, உடனடியாக வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

