த.வெ.க. அரசின் முதல் வேளாண் பட்ஜெட் 2026-27: விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

2026-27ஆம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை பட்ஜெட்டை அமைச்சர் ஆர். வினோத் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில் விவசாயிகளுக்கான மானியங்கள், நீர் மேலாண்மை, இயற்கை விவசாயம், தோட்டக்கலை, விதை சுத்திகரிப்பு, பனைப் பாதுகாப்பு, பருத்தி மற்றும் தென்னை உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவித் திட்டம், துளித் துளித் தண்ணீர் திட்டம், வேளாண் காடுகள் திட்டம், வெங்காய சேமிப்புக் கிடங்குகள், பண்ணைக் குட்டைகள், உயர் தொழில்நுட்ப சாகுபடி உள்ளிட்ட திட்டங்களுக்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய திட்டங்கள், மானியங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் குறித்து முழுமையாக பார்க்கலாம்.

வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:

  • அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவித் திட்டத்திற்கு ரூ.56.72 கோடி நிதி ஒதுக்கீடு. இதன்மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு உயர் மதிப்புடைய வேளாண் திட்டங்களில் 20% கூடுதல் மானியம் வழங்கப்படும்.
  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்காக 300 ஆழ்துளைக் கிணறுகள் அல்லது குழாய்க் கிணறுகளுக்கு சூரிய சக்தி பம்புசெட்டுகள் 100% மானியத்தில் வழங்கப்படும்.
  • மழை மற்றும் வெயிலில் இருந்து விளைபொருட்களைப் பாதுகாக்க 43,500 தார்பாய்கள் வழங்கப்படும். இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.
  • மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டியில் வெற்றி பெறும் விவசாயிகளுக்கு ‘மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் விருது’ வழங்கப்படும். 10 பயிர்களுக்கு மொத்தம் ரூ.50 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும்.
  • மாவட்ட அளவில் வெற்றி பெறும் விவசாயிகளுக்கு ‘வெற்றி விவசாயி விருது’ வழங்கப்படும். 9 பயிர்களுக்கு மொத்தம் ரூ.67.50 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும்.
  • சிறந்த இயற்கை/உயிர்ம விவசாயிக்கான ‘நம்மாழ்வார் விருது’ வழங்கப்படும். இதற்காக ரூ.11 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும்.
  • விவசாயிகளின் அனைத்துத் தேவைகளையும் ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் வகையில் 8 புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள் அமைக்கப்படும். இதற்காக ரூ.27.82 கோடி நிதி ஒதுக்கீடு.
  • தொழில்நுட்பமும் பாரம்பரியமும் சங்கமிக்கும் வகையில் வேளாண் கண்காட்சி நடத்தப்படும். இதற்காக ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு.
  • விதை சுத்திகரிப்புத் திறனை அதிகரிக்க 3 புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். இதற்காக ரூ.7.10 கோடி நிதி ஒதுக்கீடு.
  • 17,315 ஏக்கர் பரப்பளவுக்கு விதைக்கரும்பு மானியம் வழங்கப்படும். இதற்காக ரூ.9.36 கோடி நிதி ஒதுக்கீடு.
  • பனைப் பாதுகாப்பு இயக்கத்திற்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு. இதன்மூலம் பனை விதைகள் மற்றும் பனங்கன்றுகள் விநியோகம் செய்யப்படும்.
  • ‘வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம்’ திட்டத்திற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.
  • ‘தமிழ்நாடு தளிர்கீரைகள்’ திட்டத்திற்கு ரூ.1.20 கோடி நிதி ஒதுக்கீடு.
  • தோட்டக்கலைப் பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க உயர் தொழில்நுட்ப சாகுபடி முறைகள் அறிமுகப்படுத்தப்படும். இதற்காக ரூ.41 கோடி நிதி ஒதுக்கீடு.
  • தென்னை சார்ந்த பொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்கச் செய்ய ‘தமிழ்நாடு தென்னை பதப்படுத்தும் கழகம்’ செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.5.30 கோடி நிதி ஒதுக்கீடு.
  • தரமான பருத்தி உற்பத்தியை அதிகரிக்க ‘பருத்தி மறுமலர்ச்சி இயக்கம்’ செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.27.21 கோடி நிதி ஒதுக்கீடு.
  • நீர் மேலாண்மையை மேம்படுத்த ‘துளித் துளித் தண்ணீர்’ திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.785 கோடி நிதி ஒதுக்கீடு.
  • விவசாய நிலங்களில் நிரந்தரப் பசுமையை உருவாக்க ‘வேளாண் காடுகள் திட்டம்’ செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.17.70 கோடி நிதி ஒதுக்கீடு.
  • வெங்காய சேமிப்புக்காக ரூ.22 கோடி மதிப்பீட்டில், 57,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நவீன சேமிப்பு வசதிகள் உருவாக்கப்படும்.
  • அவகாடோ, கிவி உள்ளிட்ட உயர் மதிப்புடைய பழங்களின் உற்பத்தியை அதிகரிக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.1.87 கோடி நிதி ஒதுக்கீடு.
  • 100% மானியத்தில் 500 பண்ணைக் குட்டைகள் அமைத்தல் மற்றும் 75% மானியத்தில் 500 பண்ணைக் குட்டைகளைத் தூர்வாருதல் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.8.50 கோடி நிதி ஒதுக்கீடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *