“நாட்டாமை குடும்பம்” என பச்சை குத்திக்கொள்ளலாம்.. சரத்குமார்!

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் தனது பிறந்தநாளையொட்டி ஆதரவாளர்களுக்கு நடிகர் சரத்குமார் விருந்து வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், “நாட்டாமை குடும்பம்” என பச்சை குத்திக்கொள்வது நமது குடும்ப அடையாளமாக இருக்கும் என்று கூறினார். தன் மீது பாசம் கொண்டவர்கள் விரும்பினால் பச்சை குத்திக்கொள்ளலாம் என்றும், யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் தெரிவித்தார்.

தானும் “நாட்டாமை குடும்பம்” என பச்சை குத்திக்கொள்ள இருப்பதாகவும், தற்போது படப்பிடிப்பு காரணமாக குத்திக்கொள்ள முடியவில்லை என்றும் கூறினார். ஏற்கனவே தனது வலது தோளில் தேசியக் கொடியை பச்சை குத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், “நாட்டாமை குடும்பம்” என்ற பச்சை ரசிகர்களுக்கு கிரீன் கார்டு போன்றது என்றும், அந்த அடையாளம் இருந்தால் தன்னை எளிதாக சந்திக்கலாம் என்றும் சரத்குமார் கூறினார்.

தன்னை “நாட்டாமை”, “சுப்ரீம் ஸ்டார்” என அறிமுகப்படுத்திய ரசிகர்களுக்கும், தனது பிறந்தநாளை கொண்டாட வந்தவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கிய சரத்குமார், தீய பழக்கங்களை தவிர்த்து, எந்த செயலையும் அளவுடன் செய்ய வேண்டும் என்று கூறினார். சமூக வலைதளங்களில் உண்மையான தகவல்களும், தவறான தகவல்களும் வேகமாக பரவுகின்றன என்றும் குறிப்பிட்டார்.

மேலும், ரசிகர்கள் நடிகர்களுக்கு அளிக்கும் அன்பே தங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு என்றும் சரத்குமார் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *