தாயின் கனவை நிறைவேற்றிய இன்ஸ்டா பிரபலம்..
இன்ஸ்டா பிரபலமான யோகேஷ் ராவத், உத்தரகாண்ட் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது மும்பையில் வசித்து வருகிறார். அவர் தனது தாயை முதல் முறையாக ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்ற மகிழ்ச்சியான தருணத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த நிலையில், அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.
வீடியோவின் தொடக்கத்தில் காரில் பயணித்தபடி பேசும் யோகேஷ், “நான் சிறுவனாக இருந்தபோது, ஒரு நாள் அம்மாவை ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்வேன் என்று வாக்குறுதி அளித்தேன். இன்று அந்த கனவு நனவாகி இருக்கிறது” என்று உணர்ச்சியுடன் பேசியுள்ளார். பல ஆண்டுகளாக மனதில் வைத்திருந்த அந்த ஆசையை நிறைவேற்றிய தருணம் என்பதால், அவருக்கும் அவரது தாய்க்கும் அது வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம் என கூறியுள்ளார்.
ஹெலிகாப்டரை முதல் முறையாக அருகில் பார்த்த யோகேஷின் தாய், ஆரம்பத்தில் சற்று பதற்றத்துடனும் பயத்துடனும் இருந்ததாக வீடியோவில் தெரிகிறது.
ஆனால், தனது தாய்க்கு தைரியம் கூறி, அவரது கைகளைப் பிடித்தபடி யோகேஷ் ஹெலிகாப்டருக்குள் அழைத்துச் செல்கிறார். ஹெலிகாப்டர் வானில் பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, பயத்துடன் இருந்த அவரது முகம் பேரானந்தமாக மாறுகிறது. ஜன்னல் வழியாக விரிந்த பசுமையான காடுகள், மலைகள் மற்றும் இயற்கை எழிலை ரசித்தபடி, குழந்தையைப் போல உற்சாகமாக சிரிக்கும் அவரது தாயின் முகபாவனை, அந்த வீடியோவைப் பார்க்கும் ஒவ்வொருவரின் மனதையும் நெகிழச் செய்யும் வகையில் அமைந்திருந்ததாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

