100 கோடி வியூஸை கடந்த தெலுங்கு படம்…

பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ், ரகுல் ப்ரீத் சிங், சரத்குமார், ஜெகபதி பாபு, சித்தாரா உள்ளிட்டோர் நடித்த ‘ஜெய ஜானகி நாயகா’ திரைப்படம் 2017ஆம் ஆண்டு வெளியானது. இயக்குநர் போயபட்டி சீனு இயக்கிய இந்த திரைப்படம் ஆக்‌ஷன் – குடும்ப பின்னணியில் உருவானது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான போயபட்டி சீனு, தமிழில் சிம்பு நடித்த ‘சரவணா’ திரைப்படத்தின் ஒரிஜினலான ‘பத்ரா’ படத்தை இயக்கியவரும் ஆவார்.

சுமார் ₹40 கோடி பட்ஜெட்டில் உருவான ‘ஜெய ஜானகி நாயகா’, திரையரங்குகளில் வெறும் ₹20 கோடி மட்டுமே வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை சந்தித்தது.

பின்னர் இந்த படம் ‘கூன்கார்’ (Khoonkhar) என்ற பெயரில் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு, 2019ஆம் ஆண்டு Pen Movies நிறுவனத்தின் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டது.

கடந்த ஆறு ஆண்டுகளில் தொடர்ந்து பார்வையாளர்களின் ஆதரவைப் பெற்று, தற்போது 100 கோடி (1 பில்லியன்) பார்வைகளை கடந்துள்ளது. இதன் மூலம், யூடியூபில் 1 பில்லியன் பார்வைகளை பெற்ற முதல் இந்திய டப்பிங் திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

இந்த சாதனை குறித்து இயக்குநர் போயபட்டி சீனு, “1 பில்லியன் பார்வைகள், 1000 மில்லியன் இதயங்கள், 100 கோடி உணர்வுகள்… ஒரே ஒரு திரைப்படம். உலகிலேயே இந்த சாதனையை எட்டிய முதல் படம் இதுதான்” என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, “ஜானகி கதாபாத்திரம் எப்போதும் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது. இந்த அன்புக்கு ரசிகர்களுக்கும், இயக்குநருக்கும் நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *