திருமணத்திற்கு முன் வருங்கால மனைவி செய்த கொடூரம்!

350 அடி பள்ளத்தில் தள்ளி தொழிலதிபரின் மகனை கொலை செய்ததாக காதலனுடன் கைது

மகாராஷ்டிராவில் பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபரின் மகன் கேதன் அகர்வால், 350 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த வழக்கில், அவரது வருங்கால மனைவி மற்றும் அவரது காதலன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேதன் அகர்வால், மகாராஷ்டிராவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் விஷால் அகர்வால் என்பவரின் மகன். அவருக்கும் சியா கோயல் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, வரும் நவம்பர் மாதம் நடைபெற இருந்தது.

திருமணத்திற்காக ராஜஸ்தானில் உள்ள புகழ்பெற்ற அரண்மனை ஒன்று ரூ.17 கோடிக்கு முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும், விருந்தினர்களின் பயணத்திற்காக இரண்டு சொகுசு விமானங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இந்த நிலையில், திருமணத்திற்கு முந்தைய Pre-Wedding Photo Shoot நடத்துவதற்காக, கேதன் அகர்வாலும் சியா கோயலும் புனேயில் உள்ள லோகட் கோட்டை பகுதிக்கு இருவரும் தனியாக சென்றுள்ளனர்.

அப்போது, கேதன் அகர்வால் எதிர்பாராதவிதமாக 350 அடி பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்ததாக முதலில் கூறப்பட்டது. இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடத்தில் இருந்தவர்களின் வாக்குமூலங்கள், சியாவுக்கு எதிராக அமைந்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, சியா கோயலை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவரது செல்போன் உரையாடல்கள், சமூக வலைதள பதிவுகள் மற்றும் பிற டிஜிட்டல் ஆதாரங்களையும் ஆய்வு செய்தனர்.

விசாரணையில், சியா கோயல் ஏற்கனவே சேத்தன் சௌத்ரி என்ற 22 வயது இளைஞரை காதலித்து வந்தது தெரியவந்தது. ஆனால், அவரது பெற்றோர் கட்டாயப்படுத்தி கேதன் அகர்வாலுடன் திருமணத்தை நிச்சயித்ததாக கூறப்படுகிறது.

இதனால், கேதன் அகர்வாலை கொலை செய்ய சியா கோயலும் அவரது காதலன் சேத்தன் சௌத்ரியும் திட்டமிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பு இரண்டு முறை கொலை முயற்சி செய்தும், கேதன் அகர்வால் உயிர் தப்பியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த 18-ஆம் தேதி லோகட் கோட்டைக்கு சென்றபோது, சியா தனது காதலனை அங்கு வரவழைத்ததாகவும், பின்னர் இருவரும் சேர்ந்து கேதன் அகர்வாலை 350 அடி பள்ளத்தில் தள்ளி கொலை செய்துவிட்டு, அதை விபத்து போல் சித்தரிக்க முயன்றதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

புலனாய்வு மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களின் அடிப்படையில், சியா கோயலும் சேத்தன் சௌத்ரியும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், தொழிலதிபரின் மகனை பள்ளத்தில் தள்ளி கொலை செய்ததாக வருங்கால மனைவியும், அவரது காதலனும் கைது செய்யப்பட்ட இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *