200 யூனிட் இலவச மின்சாரம்: நடிகை வைஷாலி புகாருக்கு மின்வாரியம் பதில்

தமிழகத்தில் 200 யூனிட் இலவச மின்சாரம் தொடர்பாக நடிகை வைஷாலி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலான நிலையில், மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

முன்னதாக 200 யூனிட் இலவச மின்சாரம் குறித்து ஆதரவு தெரிவித்து வைஷாலி வெளியிட்ட வீடியோவை நெட்டிசன்கள் மீண்டும் பகிர்ந்தனர். இதையடுத்து, “சொன்னபடி எதுவும் நடக்கவில்லை” எனக் கூறி அவர் மற்றொரு வீடியோவில் வருத்தம் தெரிவித்திருந்தார்.

இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், மின்வாரியம் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

மின்வாரியம் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தக் காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ள புகார் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்வதற்காக, மின்வாரியக் குழுவினர் சம்பந்தப்பட்ட நபரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் மற்றும் முழுமையான முகவரியை வழங்குமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால், அவர் தருவதாகக் கூறி இணைப்பைத் துண்டித்துவிட்டார். அதன் பிறகு அவரை தொடர்புகொள்ள முடியவில்லை.

பிரச்னையை கேட்டு தீர்க்க மின்வாரியம் தயாராக உள்ளது. உண்மை நிலவரத்தை அறியாமல் இந்த விவகாரம் தொடர்பாக வதந்திகளை பரப்ப வேண்டாம்” என கேட்டுக்கொண்டுள்ளது.

இதற்கிடையே, மின்வாரியத்தின் பதிவின் கமெண்ட் பிரிவில் பலரும் தங்களுக்கு ஏப்ரல் மாதம் வந்த மின்சாரக் கட்டணத்தையும், கடந்த இரண்டு மாதங்களில் 200 யூனிட் இலவச மின்சாரம் அறிவிக்கப்பட்ட பிறகு வந்த கட்டணத்தையும் ஒப்பிட்டு ஸ்கிரீன்ஷாட்களை பதிவிட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு மின்வாரியம் சார்பில், “உங்கள் முழு விவரங்களை DM-ல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் புகார் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்படும்” என பதிலளிக்கப்பட்டு வருகிறது.

இதனால் தமிழகத்தில் மின்சாரக் கட்டணம் மற்றும் 200 யூனிட் இலவச மின்சாரம் தொடர்பான விவகாரம் மீண்டும் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *