வங்கதேசத்துக்கு ஆதரவாக டி20 உலகக் கோப்பையை புறக்கணிக்கிறதா பாகிஸ்தான்?
வங்கதேசத்துக்கு ஆதரவாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) டி20 உலகக் கோப்பைத் தொடரை புறக்கணிக்கவுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் குறித்து பாகிஸ்தான் அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளது.
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைத் தொடர், வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ள அணிகள், இந்தியாவின் தில்லி, சென்னை உள்ளிட்ட ஐந்து நகரங்களில் மொத்தம் 55 போட்டிகளில் மோதுகின்றன.
குரூப் ஏ-வில் இந்தியா, அமெரிக்கா, நமீபியா, பாகிஸ்தான், நெதர்லாந்து அணிகளும், குரூப் பி-யில் ஆஸ்திரேலியா, இலங்கை, அயர்லாந்து, ஜிம்பாப்வே, ஓமன் அணிகளும் இடம் பெற்றுள்ளன. குரூப் சி-யில் இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், வங்கதேசம், இத்தாலி, நேபாளம் அணிகளும், குரூப் டி-யில் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், கனடா அணிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்தியா – வங்கதேசம் இடையேயான அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழ்நிலை காரணமாக, தங்களுக்கான போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற வங்கதேச கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ICC) கோரிக்கை வைத்தது. ஆனால் அந்த கோரிக்கையை ஐசிசி முழுமையாக நிராகரித்துள்ளது.
இந்த சூழ்நிலையில், வங்கதேசத்துக்கு ஆதரவாக பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் இரண்டும் டி20 உலகக் கோப்பையை புறக்கணிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.
ஆனால், இந்த தகவல்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முற்றிலும் மறுத்துள்ளது. பாதுகாப்பு காரணங்களால் வங்கதேசம் தொடரிலிருந்து விலகினாலும், பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து விலகாது என தெளிவுபடுத்தியுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகையில்,
“பாகிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து விலக எந்த காரணமும் இல்லை. பாகிஸ்தான் அணி தங்களுக்கான போட்டிகளை ஏற்கனவே இலங்கையில் விளையாட திட்டமிட்டுள்ளது. பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக இதுபோன்ற ஆதாரமற்ற தகவல்கள் பரப்பப்படுகின்றன” என தெரிவித்துள்ளனர்.

