“அவர் கோட் சூட் அவரு போட்டுக் கொள்கிறார்”-உதயநிதி

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி “முதல்வர் விஜய் கோட் சூட் போட்டது குறித்து நாம் ஒரு விமர்சனமும் செய்யவில்லை; அவர் கோட் சூட் அவரு போட்டுக் கொள்கிறார். ஆனால் கோட்டை விடுவதுதான் பிரச்னை” என கூறியுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 59 இடங்களை மட்டுமே வென்றிருப்பதுடன், அக்கட்சியின் கோட்டை எனக் கூறப்பட்ட சென்னை மாவட்டத்தில் வெறும் 2 இடங்களில் மட்டுமே வென்று படுதோல்வியைச் சந்தித்து இருக்கிறது . அதில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியும் ஒன்று.இந்த சூழலில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று சேப்பாக்கம் தொகுதி நிர்வாகிகளுக்கான நன்றி தெரிவிப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில், உதயநிதி ஸ்டாலின் தவெக அரசு குறித்தும், காங்கிரஸ் கட்சி குறித்தும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

திருச்சியில் நடைபெற்ற நன்றி தெரிவிப்புக் கூட்டத்தில் முதல்வர் விஜய் பேசியதற்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “முதல்வர் விஜய் கோட் சூட் போட்டது குறித்து நாம் ஒரு விமர்சனமும் செய்யவில்லை; அவர் கோட் சூட் அவரு போட்டுக் கொள்கிறார். அதற்கு புதுசா விளக்கம் ஒன்று கொடுத்தார். கருப்பு கோட் போட்டது பெரியார் கொள்கையாம், இதைவிட மோசமான உருட்டு இருக்கா? கோட் சூட் போட்டதெல்லாம் பிரச்சினை கிடையாது. எல்லா விதத்திலும் கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறீர்கள், அதுதான் பிரச்சினை.

தவெக கவர்ச்சியில் வெற்றி பெற்றது என்றால் முதல்வருக்கு கோபம் வருகிறது. தவெக கவர்ச்சியில் வெற்றிபெறாமல், வேறு எதைவைத்து வெற்றிபெற்றது என இரண்டு காரணங்கள் சொல்ல முடியுமா? போராட்டம் செய்தீர்களா? அல்லது எங்கள் தலைவர் (ஸ்டாலின்) போல மிசாவில் சிறை சென்றீர்களா? முதல்வருக்கு வேட்பாளர்கள் பெயர் கூட தெரியாத ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, காங்கிரஸ் குறித்து விமர்சித்திருக்கும் அவர், “நம்ம பெயரை சொல்லி வாக்கு கேட்டு வெற்றி பெற்றுவிட்டு நன்றி கூட சொல்லாம போன நன்றிகெட்ட கூட்டம் காங்கிரஸ். திமுககாரன் என்றைக்கும் மறக்கமாட்டான், மறக்கக்கூடாது; தமிழ்நாட்டு மக்களும் மறக்கமாட்டார்கள்” எனப் பேசியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *