மறைந்தாலும் மனதில் வாழும் குரல்.

நேற்று, மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் 80வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.பல பிரபலங்கள் அவரை நினைவுகூர்ந்து வாழ்த்து பாராட்டுக்களை தெரிவித்திருக்கினறனர்.

பாலு இல்லாதது பெரிய வெற்றிடமாகத்தான் இருக்கிறது!

இளையராஜா – எஸ்.பி.பி கூட்டணி தமிழ்த் திரையிசையில் முக்கியமானது. திரைத்துறையில் அவர்களது நட்பு மிகவும் நெருக்கமானது. எஸ்.பி.பி-யின் 80-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருடனான நட்பு, தமிழ்த் திரையிசைக்கு அவரின் பங்கு போன்றவற்றை உருக்கமாகப் பேசி ஒரு ஒலிக்குறிப்பை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் இளையராஜா. அதில் “பாலு இல்லாதது என் மனதில் ஒரு பெரிய வெற்றிடமாகத்தான் இருக்கிறது. ஏனென்றால், அதற்கு ஈடான ஒரு குரல் இல்லை. அவரைப் போன்று நகலெடுக்க முயற்சிக்கும் குரல்கள்கூட, சரியாகப் பாடுகிறார்களா என்றால், இல்லவே இல்லை. அவரைப் போல் யாராலும் பாடவே முடியாது. அவருடைய அர்ப்பணிப்பை எப்படி நகலெடுக்க முடியும்? அந்த திறமையை வார்த்தையால் விவரிக்க முடியாது. இதுவரை, என் இசையில் வெளியான பெரும்பாலான ஆண் குரல் பாடல்களை எஸ்.பி.பி மட்டும்தான் பாடியிருக்கிறார். அது அவருடைய புகழால் மட்டும் அல்ல, அவருடைய திறமையால் நிகழ்ந்த விஷயம்.

அவருடைய அசாத்திய திறமையால், ஒரு இசையமைப்பாளரின் கம்போசிஷனை மிக வேகமாகப் புரிந்துகொள்வார். மேலும், அந்தப் பாடலில் என்ன மாதிரியான உணர்வுகள் வெளிப்பட வேண்டுமோ, அதற்கேற்ப அதிகக் கவனத்துடன் பாடுவார். அதோடு அந்தப் பாடலுக்காக அவர் இன்னும் கூடுதல் உழைப்பையும் போடுவார். என்னுடைய எதிர்பார்ப்பு எதுவாக இருந்தாலும், அதை அவர் முழுமையாக நிறைவேற்றினார். அது மிகவும் அற்புதம். அதையெல்லாம் விட, அவர் என் சிறந்த நண்பர். அதையும் தாண்டி, இதுவரை இருந்த பின்னணிப் பாடகர்களிலேயே அவருடைய திறமை என்பது அசாத்திய திறமையாகும்.

50,000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. இசை உலகில் இது ஒரு மிகப்பெரிய சாதனை. இதுவரை யாரும் இப்படிப் பாடியதும் இல்லை. யாரும் இந்தச் சாதனையை அடைந்ததும் இல்லை. வார்த்தைகளுக்கும், கற்பனைக்கும் அப்பாற்பட்டு நடக்கக்கூடிய இந்த விஷயங்கள் ரொம்ப அற்புதமான ஒரு சமாச்சாரம். அவனுக்குப் பக்கத்தில் யாராலும் நெருங்கக் கூட முடியவில்லை. இவ்வளவு ஏன், இன்னும் எத்தனை பாடகர்கள் வந்தாலும்கூட, அதில் நூறில் ஒரு பங்கைக்கூட அவர்களால் நெருங்க முடியாது” எனக் கூறியிருக்கிறார் இளையராஜா.

வாழ்க குரலாக

கமல்ஹாசன்-என் கரம் பற்றிய விரல்,என் இசைக்கான குரல் அன்னையா எஸ்.பி.பாலசுப்ரமண்யம் அவர் வாழ்க குரலாக

பிராந்திய எல்லைகளைக் கடந்த குரல்

ஆந்திர பிரதேச முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி – “தனது அழியாத குரலால் இசை மொழி மற்றும் பிராந்திய எல்லைகளைக் கடந்தது என்று உலகிற்கு உணர்த்திய புகழ்பெற்ற பாடகர் பத்ம விபூஷன் ஸ்ரீ எஸ்.பி. பாலசுப்ரமணியம். ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய போதிலும், அவர் ஒவ்வொரு பாடலிலும் ஒரு புதிய உணர்ச்சியையும் புதிய தேடலையும் புகுத்திய ஒரு சிறந்த பாடகர். தெலுங்கு மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்த எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் பிறந்தநாளை முன்னிட்டு நமது அஞ்சலிகள்.”

ஆகியோர் தனது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். “இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்” என்பதை தனது திறமையால் பூர்த்தி செய்திருக்கிறார்… SPB.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *