திருச்சியில் களம் இறங்குவாரா ராகவா லாரன்ஸ் ?
சட்டப்பேரவை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் முதல்வர் விஜய் வெற்றிபெற்ற நிலையில், திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விஜய் ராஜினாமா செய்தார். இதனால் அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படவிருக்கிறது.
இந்நிலையில் திருச்சி கிழக்கு தொகுதியில் ராகவா லாரன்ஸ் போட்டியிடவிருப்பதாக செய்தி பரவிய நிலையில், அதுகுறித்து பதிலொன்றை அளித்துள்ளார் ராகவா லாரன்ஸ்.
“அனைவருக்கும் வணக்கம், நான் திருச்சி கிழக்குத் தேர்தலில் போட்டியிடுவது குறித்த செய்தி பல்வேறு ஊடகங்களில் பரவி வருகிறது. எனது ஊடக நண்பர்கள் அனைவரும் தொலைபேசியில் என்னைத் தொடர்புகொண்டு, இதுகுறித்து விளக்கம் கேட்டு என்னைச் சந்திக்கக் கோரி வருகின்றனர்.
இந்த யூகங்கள் ஒரு கட்டத்தில் இதற்குப் பதிலளிக்க வேண்டும் என்று நான் உணரும் அளவுக்கு வளர்ந்துவிட்டதால், இந்தக் குறிப்பைப் பகிர விரும்புகிறேன்.
நான் தற்போது ‘பென்ஸ்’ படப்பிடிப்பில் மும்முரமாக இருக்கிறேன், எனது படப்பிடிப்பு 10ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
என் தாயின் ஆசீர்வாதங்களுடன், என் வாழ்க்கை தொடர்பான ஒரு முக்கிய முடிவு வரும் 11ஆம் தேதி, வியாழக்கிழமை காலை 9:30 மணிக்கு அறிவிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

