கைப்பேசி எண் இல்லாமல் சாட்? வாட்ஸ்அப் புதிய அம்சம் நிறுத்திவைப்பு!
வாட்ஸ்அப், பயனர்களின் தனியுரிமையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், கைப்பேசி எண்ணைப் பகிராமல் தனித்துவமான பயனர் பெயர் (Username) மூலம் மற்றவர்களுடன் இணைவதற்கான புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுவரை புதிய நபர்களுடன் வாட்ஸ்அப்பில் உரையாட வேண்டுமெனில், அவர்களின் கைப்பேசி எண்ணைப் பகிர வேண்டியிருந்தது. ஆனால், இனி அதற்குப் பதிலாக பயனர் பெயரை மட்டும் பகிர்ந்தால் போதுமானது. இதன்மூலம், பயனர் பெயரைப் பயன்படுத்தி யாராவது செய்தி அனுப்பும்போது, அவர்களுக்கு அந்தப் பயனரின் கைப்பேசி எண் காட்டப்படாது.
இந்த அம்சத்திற்காக பயனர் பெயர்களை முன்பதிவு செய்யும் வசதியையும் வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, பயனர் பெயர் 3 முதல் 35 எழுத்துகள் வரை இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கூடுதல் பாதுகாப்பிற்காக ‘Username Key’ என்ற புதிய அம்சத்தையும் வாட்ஸ்அப் வழங்கியுள்ளது. இந்த அம்சத்தை இயக்கி வைத்திருந்தால், பயனர் பெயர் தெரிந்திருந்தாலும், அதனுடன் தொடர்புடைய Key-யையும் உள்ளிட்டால் மட்டுமே புதியவர்கள் அந்தப் பயனருக்கு செய்தி அனுப்ப முடியும்.
எனினும், தற்போது இந்த அம்சம் முதற்கட்டமாக பயனர் பெயர்களை முன்பதிவு செய்ய மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் இந்தச் சேவை முழுமையாகப் பயன்பாட்டுக்கு வரும் என்று வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டா (Meta) தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், வாட்ஸ்அப்பின் புதிய பயனர் பெயர் அம்சத்தை, அதன் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகள் மற்றும் கலந்தாலோசனைகள் நிறைவடையும் வரை இந்தியாவில் அறிமுகப்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசு மெட்டா நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
தகவல்களின்படி, இந்த அம்சம் எவ்வாறு செயல்படும், பயனர்களைச் சரிபார்க்க என்னென்ன வழிமுறைகள் பின்பற்றப்படும், மேலும் ஆள்மாறாட்டம், இணையவழி மோசடி மற்றும் பிற முறைகேடுகளைத் தடுக்க நிறுவனம் என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளது என்பது குறித்து விளக்கமளிக்குமாறு மெட்டா நிறுவனத்திடம் அரசு கேட்டுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் ஆய்வு மற்றும் ஆலோசனைகள் நிறைவடையும் வரை இந்தியாவில் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்த வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மெட்டா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, மூன்று நாட்களுக்குள் விரிவான விளக்கம் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், மத்திய அரசின் இந்த நோட்டீஸுக்கு மெட்டா நிறுவனம் இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை

