“புதிய அரசின் பாதையை தீர்மானிப்பது முதல் 100 நாட்கள்தான்” – எடப்பாடி பழனிசாமி

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

“புதிய அரசு பொறுப்பேற்ற முதல் 100 நாட்களில் நிதி மேலாண்மைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். புதிய அரசின் பாதையை தீர்மானிப்பது முதல் 100 நாட்கள்தான். பொதுவாக புதிய அரசுகள் தங்களின் 100 நாள் செயல்திட்டங்களை வெளியிடுவது வழக்கம். அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் முதலீடுகளும் கிடைக்கின்றன.

தவெகவைப் போலவே அதிமுக மற்றும் திமுக ஆட்சிகளும் ஏற்கெனவே வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளன.

கூவம் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். கோதாவரி–காவிரி இணைப்பு திட்டத்தை முன்னெடுத்து, காவிரி நீர் தொடர்பான பணிகளை மேம்படுத்த வேண்டும். இதுதொடர்பாக பிரதமரிடம் மனு அளித்துள்ளோம். நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

அதிமுக ஆட்சியில் 17 அரசு மருத்துவமனைகள், 7 சட்டக் கல்லூரிகள் மற்றும் 40 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கொண்டு வரப்பட்டன. இதுபோன்ற நடவடிக்கைகளுக்குப் பிறகுதான் தமிழகம் கல்வியில் இந்தியாவின் முன்னணி மாநிலமாக திகழ்ந்தது.

52 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு மடிக்கணினிகள் வழங்கியுள்ளோம். விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் சிறப்பான ஆட்சியை வழங்கியது அதிமுக அரசு. பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட அந்த ஆட்சிக் காலத்தில் கடன் சுமையும் குறைவாக இருந்தது.

சொத்து வரியை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்திற்கான நிதியை பெற மத்திய அரசுக்கு கடிதம் எழுதினால் மட்டும் போதாது; நேரடியாக பேசி நிதியை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *