தி.மு.க.வுடன் கூட்டணி முறிந்தது: த.வெ.க.வுக்கு காங்கிரஸ் ஆதரவு!

தமிழகத்தில் 234 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. இதில் ஒரு கட்சி ஆட்சி அமைக்க குறைந்தது 118 தொகுதிகள் அவசியம். ஆனால் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் த.வெ.க. அதிகபட்சமாக 108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இருந்தாலும், தனிப்பெரும் கட்சியாக இருப்பதால் த.வெ.க.வை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பார்.

அதன்படி, விஜய் முதல்-அமைச்சராக பொறுப்பேற்று, கவர்னர் நிர்ணயிக்கும் காலக்கெடுவுக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். ஆனால் 108 என்ற எண்ணிக்கையுடன் அதைச் சாத்தியப்படுத்துவது கடினம். மேலும், சட்டசபையில் த.வெ.க.வைச் சேர்ந்த ஒருவர் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டு, அவரின் மூலம் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து பெரும்பான்மை வாக்கெடுப்பும் நடைபெறும்.

இதில் சபாநாயகருக்கு வாக்களிக்கும் உரிமை கிடையாது. மேலும், த.வெ.க. தலைவர் விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால், ஒன்றை மட்டும் வைத்துக்கொள்ள முடியும்; இதனால் ஒரு தொகுதியை த.வெ.க. இழக்கும். எனவே த.வெ.க.வுக்கு சட்டசபையில் 106 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருக்கும். பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களுக்கு இன்னும் 12 இடங்கள் தேவைப்படும்.

தனித்து போட்டியிட்டதால் த.வெ.க.வுக்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லை. எனவே தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆதரவளித்தால் மட்டுமே ஆட்சியில் நீடிக்க முடியும் என்று சூழல் நிலவியது. த.வெ.க. வெளிப்படையாக எந்த கட்சியிடமும் ஆதரவு கோரவில்லை என்றாலும், பின்னணியில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன.

இந்த சூழலில் ஆட்சி அமைக்க காங்கிரஸிடம் தவெக தலைவர் விஜய் ஆதரவு கோரிய நிலையில் சென்னையில் இன்று காலை தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் கூடியது. முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், “மாநில மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து மாநில காங்கிரஸ் கமிட்டியே முடிவு செய்ய வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். இதனிடையே தவெகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முடிவை இன்று காலை 11 மணிக்கு அறிவிப்பதாக கிரிஷ் சோடங்கர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் நிர்வாகி வருகை தாமதத்தால் சென்னையில் நடைபெற இருந்த காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக அண்ணாசாலை அருகே உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் 11 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற இருந்தது. தவெகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக முடிவு எடுக்க கிரிஷ் சோடங்கர் சென்னை வந்துள்ளார்.

இந்த சூழலில் காங்கிரஸ் செயலாளார் சூரஜ் ஹெக்டோ வருகை தாமதமானதால் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் தாமதமானது. காங்கிரஸ் கட்சியில் இருந்து தேர்வான 5 எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனையில் பங்கேற்றிருந்தனர்.

இந்நிலையில் த.வெ.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக வெற்றி கழகத்தின் (TVK) தலைவர் விஜய், தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவளிக்குமாறு இந்திய தேசிய காங்கிரஸிடம் (INC) முறைப்படி கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக மக்கள், குறிப்பாக இளைஞர்கள், அரசியலமைப்பு கோட்பாடுகளை நம்பும் ஒரு மதச்சார்பற்ற, முற்போக்கான மற்றும் நலன்புரி அரசாங்கத்திற்கு மிகவும் தெளிவான, வலுவான மற்றும் பெருவாரியான தீர்ப்பை வழங்கியுள்ளனர். அடுத்த ஆட்சியை அமைப்பதற்காக, விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தை (TVK) அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

இந்திய தேசிய காங்கிரஸ், இந்தியாவில் மதச்சார்பற்ற, முற்போக்கான மற்றும் நலன்புரி அரசியலுக்காக நிற்கிறது, மேலும் அதுவே அதனை நிறுவிய அரசியல் கட்சியாகும். தமிழக மக்களின் இந்த ஆணையை மதிப்பதும், நிலைநிறுத்துவதும், நிறைவேற்ற உதவுவதும் நமது அரசியலமைப்பு கடமையாகும். அதன்படி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும், காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியும் (CLP), ஆட்சி அமைப்பதற்கு TVK-க்கு தங்களின் முழு ஆதரவையும் வழங்க முடிவு செய்துள்ளன.

இந்திய அரசியலமைப்பை நம்பாத எந்தவொரு மதவாத சக்திகளையும் இந்தக் கூட்டணியிலிருந்து த.வெ.க. விலக்கி வைத்தால் மட்டுமே எங்கள் ஆதரவு. ( நிபந்தனைக்குட்பட்டது).

த.வெ.க. மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் இடையேயான இந்தக் கூட்டணி, தந்தை பெரியாரின் சமூக நீதிக் கொள்கைகள் மற்றும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் அரசியலமைப்பு இலட்சியங்களுக்கு வலுவான அர்ப்பணிப்புடன், வரும் ஆண்டுகளில் மற்றும் பத்தாண்டுகளில் பெருந்தலைவர் காமராஜரின் தமிழ்நாட்டின் பொற்காலத்தை மீட்டெடுக்க பாடுபடும்.

இரு கட்சிகளுக்கும் இடையே பரஸ்பர மரியாதை, உரிய பங்கு மற்றும் பகிரப்பட்ட பொறுப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நிறுவப்பட்ட இந்தக் கூட்டணி, இந்த அரசாங்கத்தை அமைப்பதற்கு மட்டுமல்லாமல், உள்ளாட்சி அமைப்புகள், மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கான எதிர்காலத் தேர்தல்களுக்கும் பொருந்தும்.

விஜய் மற்றும் ராகுல் காந்தி ஆகியோர், மதச்சார்பற்ற மற்றும் முற்போக்கான அரசாங்கத்திற்கான தமிழ்நாட்டு மக்களின் இந்த வரலாற்றுத் தீர்ப்பை மதிக்கவும், மக்களின், குறிப்பாக தமிழ்நாட்டு இளைஞர்களின் கனவுகளையும் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவும் கூட்டாக உறுதியளிக்கின்றனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *