புதுவையில் மழையால் ஏற்பட்ட பாதிப்பை உடனடியாக சரி செய்த JCM குழுவினர்
புதுச்சேரியில் இன்று பெய்த மழையின் காரணமாக காமராஜ் நகர் தொகுதிக்குட்பட்ட கவிக்குயில் நகர், ரெயின்போ நகர், கிருஷ்ணா நகர், பாலாஜி நகர், அண்ணாமலை நகர், வெங்கடேஸ்வர நகர் மற்றும் சாமிப்பிள்ளை தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
இந்த தகவலை அறிந்த காமராஜா நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களின் உத்தரவின் பேரில், தொகுதி பேரிடர் குழு நிர்வாகிகளை தொடர்பு கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து LJK மக்கள் தொடர்பு அதிகாரி ரவிக்குமார் மற்றும் தொண்டரணி தலைவர் மதன் ஆகியோர் சம்பவ இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அப்பகுதிக்குட்பட்ட உப்பனாறு வாய்க்காலில் பாலம் கட்டும் பணிகள் அரசின் சார்பில் நடைபெற்று வருவதாகவும், அந்த பணிகள் முழுமையாக நிறைவடையாத காரணத்தினால் கழிவுகள் அடைப்பு ஏற்பட்டு மழைநீர் வெளியேறாமல் தேங்கி இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் உடனடியாக உழவர்கரை முனிசிபாலிட்டி இளநிலை பொறியாளர் ஜெய்சங்கர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு நிலைமையை எடுத்துரைத்தனர். மேலும் புதுச்சேரியில் குப்பைகளை அகற்றும் கிரீன் வாரியார் நிறுவன ஊழியர்களை வரவழைத்து, வாய்க்காலில் தேங்கியிருந்த குப்பைகள் மற்றும் அடைப்புகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்தினர்.
அதன் பின்னர் மழைநீர் தடையின்றி பாலம் வழியாக வெளியேற தொடங்கியதால், தொகுதி முழுவதும் தேங்கியிருந்த மழைநீர் வேகமாக வடிந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து, உடனடி நடவடிக்கை எடுத்த சட்டமன்ற உறுப்பினர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.

