சாய் அபயங்கரின் இசைக் கனவு!
சினிமா மற்றும் இன்டி இசை என இரு தளங்களிலும் தனது தனித்துவமான இசையால் கவனம் ஈர்த்து வருகிறார் சாய் அபயங்கர். தனுஷ் நடிக்கும் ‘ஓம்’, அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’, கார்த்தியின் ‘மார்ஷல்’, சூர்யாவின் 48-வது படம் என அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற உரையாடல் ஒன்றில், “எந்த இயக்குநரின் படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்பது உங்கள் ஆசை?” என சாய் அபயங்கரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், “2024-ல் என்னுடைய முதல் பாடல் வெளியானபோது, இவ்வளவு பெரிய பயணம் இருக்கும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. தற்போது அட்லீ சார் படத்திற்கு இசையமைப்பது கூட எனக்கு இன்னும் நம்ப முடியாத விஷயமாகத்தான் இருக்கிறது. தொடர்ந்து இதுபோன்ற நல்ல வாய்ப்புகளில் பணியாற்ற வேண்டும் என்பதே என் விருப்பம்” என்றார்.
மேலும், “கிறிஸ்டோபர் நோலன் படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்பது என்னுடைய மிகப்பெரிய கனவு. சமீபத்தில் AI மூலம், நோலன் என்னுடைய இசையைப் பாராட்டுவது போன்ற ஒரு வீடியோவை பார்த்தேன். அது மிகவும் உற்சாகமாக இருந்தது. அந்த வீடியோவில் நடந்தது போலவே, நிஜத்திலும் ஒருநாள் நோலன் என்னுடைய இசையைப் பாராட்ட வேண்டும். அதற்காக தொடர்ந்து உழைப்பேன்” என்றும் கூறினார்.
அதேபோல், விஜய் படத்தில் பணியாற்றும் வாய்ப்பு குறித்து பேசிய சாய் அபயங்கர், “விஜய் சாரின் படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்பது என்னுடைய மிகப்பெரிய ஆசை. இனி அவருடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்காமல் போகலாம் என்று நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. என் வாழ்க்கையில் நான் தவறவிடக்கூடிய மிகப்பெரிய வாய்ப்பு இதுவாக இருக்கும். அந்த வாய்ப்பு கிடைத்திருந்தால், விஜய் சாருக்காக 16 பாடல்கள் கொண்ட ஒரு ஆல்பத்தையே உருவாக்கியிருப்பேன்” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

