1.5 ஆண்டுகள் உழைப்பு.. கடைசியில் நின்ற படம்! அப்பா – மகன் பிரச்சனை குறித்து சேரன் பேச்சு
பாமக நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் முயற்சியில் இயக்குநர் சேரன் ஈடுபட்டிருந்தார். இதற்காக சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக படக்குழுவினர் பணியாற்றிய நிலையில், இறுதியில் அந்த திரைப்படம் கைவிடப்பட்டது.
சென்னையில் நடைபெற்ற ‘ஒன்’ திரைப்பட விழாவில் பேசிய இயக்குநர் சேரன், ராமதாஸின் வாழ்க்கையில் 1987-ம் ஆண்டு முதல் நடைபெற்ற சம்பவங்களை படமாக பதிவு செய்ய திட்டமிட்டிருந்ததாக தெரிவித்தார்.
அந்த காலகட்டத்தை திரையில் கொண்டு வருவதற்காக தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து, அப்போதைய கிராமங்கள், சாலைகள் மற்றும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நபர்களை தேடியதாகவும் கூறினார். சுமார் 15 பேர் கொண்ட குழு இந்த பணிகளில் ஈடுபட்டதாகவும், ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு செய்து தேவையான தகவல்களை சேகரித்ததாகவும் தெரிவித்தார்.
இவ்வளவு பணிகள் மேற்கொள்ளப்பட்ட பிறகும் திரைப்படம் தொடங்கப்படாமல் போனது தனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியதாக சேரன் கூறினார்.
மேலும், “அப்பன் – மகன் சண்டை போட்டதால் படம் நின்றுவிட்டதாக அப்போது கூறினார்கள். இப்போது அப்பனும் மகனும் சேர்ந்துவிட்டார்கள். ஆனால், படம் எடுக்க ஆள் இல்லை” என சிரித்தபடி குறிப்பிட்டார்.
ஒரு திரைப்படத்திற்காக இயக்குநரும் அவரது குழுவினரும் மேற்கொள்ளும் உழைப்பு, படம் உருவாகாமல் போகும்போது ஏற்படுத்தும் வலியை சினிமா துறையில் இருப்பவர்கள் மட்டுமே உணர முடியும் என்றும் சேரன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்..
மேலும், “இதுதான் அவலம். சினிமா நம்மை எங்கே தூக்கிக்கொண்டு போகும், எங்கே ஏமாற்றும், எங்கே உட்கார வைக்கும் என்று தெரியாது” என்றும் சேரன் தெரிவித்தார்.

