‘கருப்பு’ படத்தில் காட்சிகள் நீக்கம்.. மன்சூர் அலிகான் அதிருப்தி!
சூர்யா நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கிய ‘கருப்பு’ திரைப்படத்தில் தான் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டதாக நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
சென்னை வடபழனியில் நடைபெற்ற ‘ஆல் பாஸ்’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், ‘கருப்பு’ படத்தில் இடம்பெற்ற ‘நாங்க நாலு பேரு’ பாடலுக்காக தான் சிரமப்பட்டு ஆடியதாக கூறினார். ஆனால், அந்தக் காட்சிகள் படத்தில் இடம்பெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
நேரமின்மை காரணமாக காட்சிகள் நீக்கப்பட்டதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும், பின்னர் அந்தக் காட்சிகளை யூடியூபில் வெளியிடுவதாக கூறியிருந்தும் இதுவரை வெளியிடவில்லை என்றும் மன்சூர் அலிகான் குற்றம்சாட்டினார்.
350-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள தனக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்றும் அவர் அதிருப்தி தெரிவித்தார்.
மேலும், தற்போதைய திரைப்படங்களில் சில ஹீரோக்கள் பில்டப் காட்சிகளை மட்டுமே நம்பி இருப்பதாக விமர்சித்த மன்சூர் அலிகான், தனது உழைப்பால் தான் திரையுலகில் உயர்ந்ததாகவும், யாரிடமும் பிச்சை எடுக்கவில்லை என்றும் கூறினார்.

