ஐரோப்பாவில் வரலாறு காணாத வெப்பம்.. 16,000 பேர் பலி! காரணம் என்ன?

ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஜூன் மாத இறுதியில் கடுமையான வெப்ப அலை வீசியது. இதன் காரணமாக வழக்கமாக ஏற்படும் உயிரிழப்புகளைவிட சுமார் 16 ஆயிரம் பேர் கூடுதலாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய இறப்பு கண்காணிப்பு வலையமைப்பு நடத்திய ஆய்வில், பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட வடக்கு ஐரோப்பிய நாடுகளில் வெப்பத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அதிகமாக இருந்தது தெரியவந்துள்ளது.

கடந்த ஜூன் மாத இறுதியில் ஐரோப்பாவின் பல பகுதிகளில் வெப்பநிலை வழக்கமான அளவைவிட பல டிகிரி அதிகமாக பதிவானது. இந்த கடும் வெப்பத்தால் வயதானவர்கள் மற்றும் ஏற்கனவே உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, தெற்கு ஐரோப்பிய நாடுகளைவிட வடக்கு ஐரோப்பிய நாடுகளில் வெப்பத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

ஸ்பெயின், இத்தாலி, கிரீஸ் போன்ற தெற்கு ஐரோப்பிய நாடுகளில் கடுமையான வெப்பம் என்பது புதிதல்ல. அங்கு மக்கள் இதுபோன்ற வெப்பநிலையை சமாளிக்க ஏற்கனவே பழகியுள்ளனர். அதற்கேற்ப வீடுகள் மற்றும் கட்டிடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், வெப்பத்தை சமாளிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அதிகமாக உள்ளன.

ஆனால், வடக்கு ஐரோப்பிய நாடுகளில் நிலைமை சற்று மாறுபட்டதாக உள்ளது. தெற்கு ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது, வடக்கு ஐரோப்பாவில் வீடுகள் மற்றும் கட்டிடங்களில் ஏர் கண்டிஷனிங் வசதி குறைவாகவே உள்ளது. இதுவும் கடும் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க ஒரு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

பெல்ஜியத்தில் கடந்த 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவான மிக மோசமான வெப்ப அலை மரண விகிதங்களில் இதுவும் ஒன்று என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ஆண்டின் இந்த காலகட்டத்தில் இவ்வளவு அதிகமான உயிரிழப்புகள் ஏற்படுவது மிகவும் அசாதாரணமானது என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

மனிதர்களின் செயல்பாடுகளால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாகவே இதுபோன்ற அதீத வெப்ப அலைகள் அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மேலும், வரும் ஆண்டுகளில் இதுபோன்ற வெப்ப அலைகள் அடிக்கடி ஏற்படுவதுடன், அதன் தாக்கமும் மேலும் அதிகரிக்கக்கூடும் என எச்சரித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *