தொடர்ந்து புறக்கணிக்கப் படுகிறதா தமிழ்த்தாய் வாழ்த்து ? | மீண்டும் 3-ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து!
தவெக ஆட்சியின் முதல் நாளிலேயே தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டது பல சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து இனிமேல் தமிழக அரசு விழாக்களில் அவ்வாறு நடக்காது என தவெக சார்பில் உறுதியளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.அதுமட்டுமல்லாமல் இதனைப் பற்றி தமிழக முதல்வர் விஜய் ஆலோசனை செய்ததாகவும்,பிரதமரிடம் வலியுறுத்தியதாகவும் கூறப்பட்டு வந்தது.
மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் அரசு நிகழ்ச்சியில் தேசிய பாடலான வந்தே மாதரத்தை கட்டாயமாகப் பாட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்த அறிவிப்பின்படி அரசு நிகழ்ச்சியில் முதலாவதாக ’வந்தே மாதரம்’ பாடல்தான் ஒலிக்கப்பட வேண்டும் என்றும், அதன் பிறகே தேசிய கீதம் ஒலிக்கப்பட வேண்டும் என்றும் கூறியது. அதேபோல ’வந்தே மாதரம்’ பாடலின் அதிகாரப்பூர்வ முழுப் பதிப்பான 6 பத்திகளையும் முழுமையாகப் பாட வேண்டும் என்றும் உத்தரவிட்டது. வந்தே மாதரத்தின் இறுதிப் பத்திகளில் இந்துக் கடவுள்கள் குறித்த பாடல்கள் இருந்ததால் இதற்கு எதிர்ப்பும் எழுந்தது.
வந்தேமாதரம் கட்டாயமாக்கப் பட்டதற்கும் அதனை தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்கு தள்ளப்பட்டதற்கும் கடும் பெரும் எதிர்ப்புகள் தொடர்ந்து எழுந்து வந்தது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் முதலில் வந்தே மாதரம் பாடப்பட்டு, தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் முதல் முறையாக வந்தே மாதரத்துடன் தொடங்கிய பட்டமளிப்பு விழா! இதுவாக மாறியுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதிய மனோன்மணியம் சுந்தரனார் பெயர் வாய்த்த பல்கலைகழகங்களிலேயே இவ்வாறு நடந்ததற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர் இருக்கும் நிலையில், மக்கள் மாளிகை உத்தரவிட்டதன்படி, ’வந்தே மாதரம்’ பாடல் முதலிலும், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகவும் பாடப்படும் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் ஏற்கெனவே அறிவித்திருந்தார். அப்போதே இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தொடர்ந்து பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்ற நிலையில், உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் நிகழ்ச்சியை புறக்கணித்தார். மேலும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதன்படி ’வந்தே மாதரம்’ பாடலுடன் பட்டமளிப்பு விழா தொடங்கிய நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்

