‘மீசைய முறுக்கு 2’ கொண்டாட்ட நிகழ்வு ரத்து – ரசிகர்களிடம் ஹிப்ஹாப் ஆதி வருத்தம்!

சென்னை பீனிக்ஸ் மாலில் நேற்று மாலை நடைபெற இருந்த ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் கொண்டாட்ட நிகழ்வு, அதிகளவிலான ரசிகர்கள் கூட்டம் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

‘மீசைய முறுக்கு’ திரைப்படம் வெளியாகி 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதன் இரண்டாம் பாகமான ‘மீசைய முறுக்கு 2’ வரும் செப்டம்பர் 25ஆம் தேதி வெளியாக உள்ளது. இதையொட்டி, சென்னை பீனிக்ஸ் மாலில் சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் ஆதி பங்கேற்க இருந்தார்.

நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பீனிக்ஸ் மாலில் திரண்டதால், கூட்டம் அதிகரித்தது. இதையடுத்து, பாதுகாப்பு மற்றும் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் காவல்துறையினர் ரசிகர்களை அமைதியாக கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டனர். இதனை ஏற்று ரசிகர்களும் அமைதியாக அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதையடுத்து, ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்த ஹிப்ஹாப் ஆதி, சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில், ரசிகர்களை சந்திப்பதற்காக பீனிக்ஸ் மாலில் ஆவலுடன் காத்திருந்ததாகவும், கூட்டம் அதிகரித்ததால் பாதுகாப்பு காரணங்களுக்காக காவல்துறையினர் நிகழ்ச்சியை ரத்து செய்ய அறிவுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

மேலும், நிகழ்ச்சிக்காக வந்து காத்திருந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், “மற்றுமொரு நிகழ்ச்சியில் மீண்டும் சந்திப்போம்” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *