முதல்வர் தொடங்கி வைக்கும் ‘வெற்றி தமிழ்நாடு’ மாநாடு..தமிழகத்திற்கு குவியும் முதலீடுகள்..

‘வெற்றி தமிழ்நாடு 2026’ முதலீட்டாளர்கள் மாநாடு இன்று தொடக்கம் – ரூ.67,452 கோடி முதலீடுகள் எதிர்பார்ப்பு

தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை அதிகரித்து, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் நடத்தப்படும் ‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026’ இன்று (ஆகஸ்ட் 13) சென்னையில் நடைபெறுகிறது.

கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த மாநாட்டை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தொடங்கி வைக்கிறார். உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீட்டாளர்கள், தொழில்துறை தலைவர்கள், தொழில்முனைவோர் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்வதுடன், உலக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் முக்கிய தளமாக இந்த மாநாடு அமையும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

உற்பத்தி, மின்னணு சாதனங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் உட்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் புதிய முதலீடுகளை ஈர்ப்பது மாநாட்டின் முக்கிய நோக்கமாக உள்ளது. இதன் ஒரு பகுதியாக பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, மாநாட்டில் மொத்தம் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. இதன் மூலம் ரூ.67,452 கோடி மதிப்பிலான முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முதலீடுகள் நடைமுறைக்கு வரும் பட்சத்தில், தமிழ்நாடு முழுவதும் சுமார் 1,06,998 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி முதலீட்டு இலக்காக மேலும் வலுப்படுத்தும் முயற்சியில் ‘வெற்றி தமிழ்நாடு 2026’ முதலீட்டாளர்கள் மாநாடு முக்கிய மைல்கல்லாக அமையும் என தமிழக அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *