200 யூனிட் இலவச மின்சாரம் விவகாரம்:நடிகை வைஷாலி வீடியோவுக்கு மின்வாரியம் (EB) – பதில்

தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, பொதுமக்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என முதல்வர் விஜய் கையெழுத்திட்டதாகக் கூறப்பட்ட நிலையில், சீரியல் நடிகை வைஷாலி வெளியிட்ட பழைய வீடியோ தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், “அண்ணா தளபதியோட முதல் கையெழுத்தே 200 யூனிட் EB ஃப்ரீ. இனிமேல் உங்கள் வீட்டில் EB பிரச்சினையே இருக்காது. இது வெறும் ஸ்டார்டிங் தான். இனி எல்லாமே அதிரடியாக இருக்கும். தமிழ்நாடே அப்படி மாறப்போகிறது” என வைஷாலி பேசியிருந்தார்.
அப்போது பெரிய அளவில் கவனம் பெறாத இந்த வீடியோ, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மின்வெட்டு மற்றும் மின் கட்டணம் அதிகரித்துள்ளதாக பொதுமக்களிடையே புகார்கள் எழுந்துள்ள நிலையில், தற்போது மீண்டும் நெட்டிசன்களால் பகிரப்பட்டு வருகிறது.

மேலும், “இதுதான் உங்க அண்ணனோட மாற்றமா?” என்ற விமர்சனத்துடன், வைஷாலியின் வீடியோவை இருண்ட பின்னணியில் இருப்பது போன்று எடிட் செய்து சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதையடுத்து, வைஷாலி மீண்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டு, தான் முன்பு பதிவிட்ட வீடியோ குறித்து மன்னிப்பு கேட்டுக்கொண்டார். மேலும், “தவெக மின்சார விஷயத்தில் சொன்னபடி இதுவரை செயல்முறையில் எதுவும் நடக்கவில்லை. நீங்கள் சொன்ன 200 யூனிட் இலவச மின்சாரத்தை ரத்து செய்துவிட்டு, ஏற்கனவே இருந்ததைப் போல கட்டணத்தை வழங்கினால்கூட நன்றாக இருக்கும். இப்படியே போனால் அரசாங்கத்தின் மீது இருக்கும் நம்பிக்கை போய்விடும்” எனக் கூறியிருந்தார்.
இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், மின்வாரியம் அதற்கு பதிலளித்துள்ளது.
மின்வாரியம் வெளியிட்டுள்ள பதிவில், வைஷாலி தெரிவித்த புகார் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக மின்வாரியக் குழுவினர் அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் மற்றும் முழுமையான முகவரியை வழங்குமாறு கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், விவரங்களை வழங்குவதாகக் கூறி அவர் தொலைபேசி அழைப்பை துண்டித்ததாகவும், அதன் பின்னர் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் மின்வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், பிரச்னையை நேரில் விசாரித்து தீர்வு காண தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளது.
உண்மை நிலவரத்தை அறியாமல் இந்த விவகாரம் தொடர்பாக வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதற்கிடையே, மின்வாரியத்தின் சமூக வலைதளப் பதிவின் கமெண்ட் பகுதியில் பலரும் தங்களுக்கு ஏப்ரல் மாதம் வந்த மின் கட்டணத்தையும், 200 யூனிட் இலவச மின்சாரம் அறிவிக்கப்பட்டதாக கூறப்படும் பின்னர் வந்த கட்டணத்தையும் ஒப்பிட்டு, அதற்கான ஸ்கிரீன்ஷாட்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கு மின்வாரியம் சார்பில், “உங்கள் முழு விவரங்களை DM-ல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் புகார் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்படும்” என பதிலளிக்கப்பட்டு வருகிறது.
இதனால், 200 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் மின் கட்டணம் தொடர்பான விவகாரம் மீண்டும் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.

