ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.41 ஆக உயர்வு.. விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று விதி 110-ன் கீழ் பேசிய முதலமைச்சர் விஜய், பால் உற்பத்தியாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
தமிழ்நாட்டில் பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 3 லட்சத்திற்கும் அதிகமான உற்பத்தியாளர்களிடமிருந்து தினமும் லட்சக்கணக்கான லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. பால் உற்பத்திக்கான தீவனம், பணியாளர் ஊதியம் உள்ளிட்ட செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.38 கொள்முதல் விலையாக வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி ரூ.41 வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இதற்காக கூட்டுறவு சங்கங்கள் வழங்கும் கொள்முதல் தொகை லிட்டருக்கு ரூ.1 உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அரசு வழங்கும் ஊக்கத்தொகையும் ரூ.3-ல் இருந்து ரூ.5 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஒரு லிட்டர் பாலுக்கு உற்பத்தியாளர்கள் கூடுதலாக ரூ.3 பெற உள்ளனர். இந்த மாற்றத்தின் மூலம் 3.16 லட்சத்திற்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பால் கொள்முதல் விலை உயர்வால் அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.360 கோடி செலவாகும் என்றும் முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

