₹22 ஆயிரம் பட்ஜெட்… ரூ.33 கோடி வசூல்! | ட்ரோல் செய்யப்பட்ட | ‘Niu Lai’ படத்தின் அதிர்ச்சி வெற்றி!
ஒரு மோசமான படம் வெளியானால், அது ட்ரோல் செய்யப்படுவதும், வசூல் இல்லாமல் தோல்வி அடைவதும் வழக்கமான ஒன்றுதான். ஆனால், ஒரு படம் மோசமாக இருப்பதாக கடுமையாக விமர்சிக்கப்பட்டும், அதே படம் மிகப்பெரிய ஹிட் ஆகி வசூலை அள்ளிய சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.
அந்தப் படத்தின் பெயர் ‘Niu Lai’. இளம் கன்றுக்குட்டியான Niu Lai மேற்கொள்ளும் சாகசப் பயணத்தை மையமாகக் கொண்ட அனிமேஷன் 3D படமாக இது உருவாகியுள்ளது. இப்படத்துக்கு Sun Lifang கதை எழுதியுள்ளார். அவரது மகன் Xin Yumeng இயக்கியுள்ளார். தாய்–மகன் கூட்டணியால் சுமார் 5 ஆண்டுகளாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

கிடைத்த வசதிகள் மற்றும் குறைந்த வளங்களைக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டதால், எதிர்பார்த்த அளவுக்கு தரமான அனிமேஷன் படமாக இதை உருவாக்க முடியவில்லை. இதனால் படம் வெளியானதும், “இது என்ன அனிமேஷன்? AI-யில் உருவாக்கினால்கூட இதைவிட சிறப்பாக இருக்கும்” என பலரும் சமூக வலைதளங்களில் கேலி செய்யத் தொடங்கினர்.
பொதுவாக ஒரு படத்துக்கு எதிராக வரும் இப்படியான ட்ரோல்கள் அதன் வசூலை பாதிக்கும். ஆனால், ‘Niu Lai’ படத்துக்கு நிலைமை முற்றிலும் மாறாக அமைந்தது. “எல்லோரும் இப்படி கலாய்க்கிறார்களே… அப்படி என்னதான் படத்தில் இருக்கிறது?” என்ற ஆர்வத்தில் பலரும் திரையரங்குகளை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கினர்.
சிலர் நண்பர்களுடன் குழுவாகச் சென்று, படத்தை பார்த்துக்கொண்டே அதன் காட்சிகளை கலாய்த்து ரசித்துள்ளனர். இதனால் சமூக வலைதளங்களில் படத்துக்கு மேலும் அதிக கவனம் கிடைத்தது.
ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளியான இப்படத்தை முதல் 10 நாட்களில் 300 பேர்கூட திரையரங்கில் பார்க்கவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால், அதன்பிறகு சமூக வலைதளங்களில் பரவிய கேலி, கிண்டல் மற்றும் ஆர்வம் காரணமாக படத்தின் பார்வையாளர்கள் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது.
முறையான விளம்பரம் இல்லை. தரமான ட்ரெய்லர் இல்லை. ஏன், சரியான போஸ்டர்கூட இல்லை. வெறும் 1,600 Yuan (இந்திய மதிப்பில் சுமார் ரூ.22,000) பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்தப் படம், தற்போது வரை 23.53 மில்லியன் Yuan (சுமார் ரூ.33 கோடி) வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒருபுறம், எதிர்பாராத வகையில் கிடைத்த இந்த வெற்றியை பலரும் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். மறுபுறம், தரமற்ற படைப்புகளை வெறும் ட்ரோல் மற்றும் கேலியின் காரணமாக கொண்டாடுவது சரியான அணுகுமுறை அல்ல எனவும் சிலர் விமர்சித்து வருகின்றனர்.

