தஞ்சையில் பரபரப்பு.. காவலரை தாக்கியதாக இளைஞர் கைது!
தஞ்சையில் விசிக மாநாட்டுக்காக வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெறவுள்ள விசிக மாநாட்டையொட்டி தஞ்சையின் பல்வேறு பகுதிகளில் அக்கட்சியினர் பேனர்கள் வைத்திருந்தனர். அனுமதியின்றி வைக்கப்பட்டதாகக் கூறி மாநகராட்சி நிர்வாகம் சில பேனர்களை அகற்றியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விசிகவினர் தஞ்சை மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை போராட்டத்தில் இருந்தவர்கள் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் மோதலாக மாறியது.

சம்பவ இடத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ., இளைஞரை தடுக்க முயன்றபோது இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும், அப்போது எஸ்.எஸ்.ஐ.யை இளைஞர் தாக்கியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். தற்போது அவர் வரும் 31-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, சம்பவம் தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள விளக்கத்தில், சட்டம் – ஒழுங்கு பிரச்சினையை கட்டுப்படுத்துவதற்காக இளைஞர் மீது குறைந்தபட்ச பலமே பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர், எஸ்.எஸ்.ஐ.யின் கன்னத்தில் அறைந்ததாகவும், அவர் மீது கடந்த ஆண்டு பெண் ஒருவரை தாக்கியதாக ஏற்கனவே வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

