மீண்டும் அரங்கேறிய கொடூரம்…நடந்தது என்ன?

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே உள்ள காரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். கூலித்தொழிலாளியான இவரது மகன் 15 வயதுடைய அஸ்வின்.இவர் அப்பகுதியில் உள்ள திருக்களாப் பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து முடித்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளி விடுமுறை முடிந்து வீட்டில் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு இளந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (25), காரையூரைச் சேர்ந்த கணேசன் (22) மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்டோருடன் ஒன்றாக டூவீலரில் வெளியே சென்றிருக்கிறார்.

பின்னர் அப்பகுதியில் உள்ள மதுபான கடையில் மது வாங்கிய அவர்கள், கீழக்காவனிப்பட்டி கண்மாய் பகுதிக்கு சென்று அங்கு அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.ஆரம்பத்தில் சாதாரணமாக பேசிக்கொண்டிருந்த அவர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு சிறிது நேரத்தில் தகராறாக மாறியதாக கூறப்படுகிறது. அப்போது அரவிந்த், அஸ்வினை தாக்கியதை பார்த்த 17 வயது சிறுவன் அச்சமடைந்து அங்கிருந்து விலகிச் சென்றுள்ளார்.

அப்போது இவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த அரவிந்த் மற்றும் கணேசன் ஆகிய இருவரும் சேர்ந்து அவர்கள் வைத்திருந்த கத்தியால் அஸ்வினை கழுத்தறுத்துக் கொலை செய்ததாக கூறப்படுகிறது.அஸ்வினின் அலறல் சத்தம் கேட்டு 17 வயது சிறுவன் அங்கு சென்று பார்த்த போது அவர் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு அதிர்ச்சி அடைந்த சிறுவன் நேரடியாக காவல் நிலையத்துக்குச் சென்று நடந்த சம்பவத்தை தெரிவித்திருக்கிறார்.தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், அஸ்வினின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அரவிந்த் மற்றும் கணேசனை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பள்ளிக்கு செல்வதாக கூறி நண்பர்களுடன் வெளியேச் சென்ற பள்ளி மாணவன், சில மணி நேரங்களிலேயே கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் திருப்புத்தூர் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *