கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை ..தமிழகத்தில் எப்போது ?

கேரள மாநிலத்தில் இன்று முதல் (04.06.2026) தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாட்டில் வானிலை எப்படி இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு பருவமழை கேரளப்பகுதிகளில் இன்று துவங்கியுள்ளது. அதன்படி தென்மேற்கு பருவமழை மேலும் தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடலின் மீதமுள்ள பகுதிகளிலும், மத்தியமேற்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளிலும் இன்று முன்னேறியுள்ளது. மேலும் லட்சத்தீவு பகுதிகளிலும், கேரளா – கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலும், மேலும் தென்மேற்கு, மத்தியமேற்கு, மத்தியகிழக்கு மற்றும் வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலும் இன்று முன்னேறியுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும் என அறிக்கை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *