அசாமில் கோர தாண்டவம் ஆடும் வெள்ளம்! 100க்கும் மேற்பட்டோர் பலி – 100+ கிராமங்கள் துண்டிப்பு

அசாமில் பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தர்ரங் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் போக்குவரத்து வசதியின்றி துண்டிக்கப்பட்டுள்ளன.

அசாம் மாநிலத்தில் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப்பெருக்கிற்கு பிரம்மபுத்திரா நதி முக்கிய காரணமாக உள்ளது. இமயமலையில் உருவாகும் இந்த நதி, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அசாம் வழியாக பாய்ந்து வங்கதேசம் சென்றடைகிறது.

இந்த நிலையில், இந்த ஆண்டும் பிரம்மபுத்திரா மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் எதிர்பாராத அளவில் கனமழை பெய்ததால், பல்வேறு பகுதிகளில் ஆறுகள் கரைபுரண்டு ஓடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கனமழை, வெள்ளம் மற்றும் கட்டட இடிபாடுகள் காரணமாக 99 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தர்ரங் மாவட்டத்தில் பிரம்மபுத்திரா மட்டுமின்றி அதன் துணை ஆறுகளான மங்கல்தாய், புஷிமாரி மற்றும் நோவா ஆகியவற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பல கிராமங்களுக்கான சாலை மற்றும் போக்குவரத்து தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

சில பகுதிகளில் மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணிகளுக்காக ஹெலிகாப்டர்களைக் கூட இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பல கிராமங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை முழுமையாக மதிப்பிடுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வெள்ளத்தால் வீடுகளை இழந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் உயரமான பகுதிகள், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கான கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், மக்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *