பள்ளி சீருடையில் மது அருந்திய மாணவிகளின் வைரல் வீடியோ…தலைமை ஆசிரியைக்கு வந்த சிக்கல்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றில், 12-ம் வகுப்பு படிக்கும் இரு மாணவிகள் பள்ளி சீருடையில் மது அருந்தியதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தி, பள்ளி தலைமை ஆசிரியைக்கு பணியிட மாற்ற உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மேட்டுக்கடை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் இரு மாணவிகள், கடந்த ஜூலை மாதம் பள்ளி சீருடையுடன் மதுபான பாட்டிலை திறந்து, வகுப்பறை வராண்டாவில் வைத்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதனை சக மாணவர்கள் சிலர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து, பள்ளி தலைமை ஆசிரியை பிரமிளா இவாஞ்சிலினிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து மாணவிகளை அழைத்து தலைமை ஆசிரியை விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது, பள்ளி வளாகத்தில் மது அருந்திய சம்பவத்தை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல், இந்த சம்பவம் வீட்டில் நடைபெற்றதாக மாணவிகளிடம் எழுதி வாங்கி அனுப்பியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மாணவிகள் பள்ளி சீருடையில் மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது. இதையடுத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ் தலைமையிலான பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மாணவிகள் மது அருந்தியதாக கூறப்படும் இடம் பள்ளி வளாகத்தில் உள்ள வகுப்பறை வராண்டா என்பது தெரியவந்ததாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், சம்பவத்தை உயர் அதிகாரிகளுக்கு முறையாக தெரிவிக்காமல் மறைத்ததாகக் கூறப்படும் பள்ளி தலைமை ஆசிரியை பிரமிளா இவாஞ்சிலினை வடசேரி அரசு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.
மேலும், தலைமை ஆசிரியைக்கு எதிராக துறை ரீதியான மேல் நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்தார்.
இதனிடையே, மாணவிகளுக்கு மதுபானம் அல்லது போதைப்பொருள் கிடைத்தது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, போதைப்பொருள் பயன்பாட்டின் தீமைகள் குறித்து பள்ளிகளில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும் என்றும் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

