குடியாத்தத்தில் அதிர்ச்சி: பெண் காவலரை கத்தியால் குத்திக் கொன்ற கணவர்!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஏர்த்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வி. குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. இவரது கணவர் அர்வின், ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த சில நாட்களாக இருவருக்கும் குடும்பப் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு பணி முடிந்து வீடு திரும்பிய தாமரைச்செல்வியை நெல்லூர்பேட்டை ஏரிக்கரை பகுதியில் அர்வின் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், மறைத்து வைத்திருந்த கத்தியால் தாமரைச்செல்வியின் கை, கழுத்து, தலை மற்றும் மார்பு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தியுள்ளார்.

ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி தாமரைச்செல்வி உயிரிழந்தார்.

இதையடுத்து, அவரது கணவர் அர்வினை கைது செய்த போலீசார், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்பப் பிரச்சினை காரணமாக பெண் காவலரை அவரது கணவரே கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *