புதுச்சேரி தற்காலிக சபாநாயகராக அன்பழகன் நியமனம்
புதுச்சேரி உப்பளம் தொகுதியில் 5-வது முறையாக வெற்றி பெற்ற அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன் எம்எல்ஏ, தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பிறப்பித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, நாளை நண்பகல் 12 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில், அன்பழகனுக்கு சட்டப்பேரவை உறுப்பினராக துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். பின்னர், அவர் சட்டப்பேரவைக்கு சென்று தற்காலிக சபாநாயகராக பொறுப்பேற்க உள்ளார்.
இதனிடையே, முதலமைச்சர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தார். கடந்த 4-ஆம் தேதி வெற்றி சான்றிதழ்களை பெற்ற நிலையில், தேர்தல் விதிகளின்படி 14 நாட்களுக்குள் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும்.
அதன்படி, ரங்கசாமி நாளை தட்டாஞ்சாவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, வரும் 20-ஆம் தேதி சட்டப்பேரவை கூடுவதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட உள்ளது.

