வீட்டுப்பாடம் எழுதாத 6 வயது சிறுவன் உயி*ழப்பு.. ஆசிரியர் தாக்கியதாக புகார்! வெளியான சிசிடிவி காட்சிகள்

ஆந்திரப் பிரதேசம் விசாகப்பட்டினத்தில் வீட்டுப்பாடம் செய்யாததாகக் கூறி ஆசிரியர் கண்டித்தபோது, 6 வயது சிறுவன் மயங்கி விழுந்து உயி*ழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விசாகப்பட்டினம் ஒன் டவுன் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்த பிரணய் தேஜ் என்ற 6 வயது சிறுவன், வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டுப்பாடம் செய்து வரவில்லை எனக் கூறி ஆசிரியர் சிறுவனை கண்டித்ததாக தெரிகிறது.

இதற்கிடையே, சிறுவன் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக பள்ளி ஊழியர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், சிறுவன் ஏற்கெனவே உயி*ழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சிறுவனின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பாக பிஎன்எஸ் சட்டத்தின் 194வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட ஆசிரியர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும், முழுமையான விசாரணைக்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதில், ஆசிரியர் ஒருவர் சிறுவனை தன்னிடம் இழுத்து கண்டிப்பதுடன், தாக்குவது போன்ற காட்சிகளும் பதிவாகியுள்ளன. இதையடுத்து சில நொடிகளில் சிறுவன் ஆசிரியர் மீது சரிந்து விழுவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

சிறுவன் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி மற்றும் மருத்துவமனை முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *