செய்திகள்

சாலைப் பலகையில் இந்தி.. தமிழ்நாட்டில் மீண்டும் மொழிப் பிரச்சனை!

சாலைப் பலகையில் இந்தி.. தமிழ்நாட்டில் மீண்டும் மொழிப் பிரச்சனை!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த புதிய வழிகாட்டிப் பலகையில் ஊர் பெயர்கள் தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக தமிழகத்தில் பல சாலை வழிகாட்டிப் பலகைகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் பயன்படுத்தப்படும் நிலையில், இந்தி இடம்பெற்றது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவின.

சாத்தான்குளம்–நாசரேத் சாலையில் கருமேனி ஆற்றுப்பாலம் மற்றும் திருச்செந்தூர் சாலை விலக்கு அருகே இந்தப் பலகை அமைக்கப்பட்டிருந்தது. அதில் திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூர், ஆழ்வார்திருநகரி உள்ளிட்ட பகுதிகளின் பெயர்கள் மூன்று மொழிகளில் குறிப்பிடப்பட்டிருந்தன. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த விவகாரம் குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் இருமொழிக் கொள்கை தொடர்பாக எந்த மாற்றத்தையும் ஏற்க முடியாது என்றும், “இருமொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டின் உயிர்க்கொள்கை. அதில் விளையாட வேண்டாம்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

மேலும், மாநில அரசே இந்தி திணிப்பை மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்றும் ஸ்டாலின் தனது பதிவில் விமர்சித்துள்ளார். அவரது கருத்தில் தற்போதைய தமிழக அரசையும் அவர் நேரடியாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, சர்ச்சை ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த வழிகாட்டிப் பலகையில் இருந்த இந்தி எழுத்துகள் அகற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சாத்தான்குளம் நெடுஞ்சாலைத் துறையைச் சேர்ந்த உதவி செயற்பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் ஆகிய இருவர் தற்காலிகமாக பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சாத்தான்குளம் சம்பவம் தமிழகத்தில் மொழிக் கொள்கை குறித்த அரசியல் விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. தமிழகத்தின் இருமொழிக் கொள்கை தொடர்பான நிலைப்பாடு குறித்து ஆளும் தரப்பும் எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து கருத்துகளை வெளியிட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *