துணிச்சலான கதைக்களம்.. ‘டோரதி’ படத்தை பாராட்டிய தனுஷ்!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், இப்படத்தை நடிகர் தனுஷ் வெகுவாகப் பாராட்டியுள்ளார். படத்தின் கதைக்களம், நடிகர்களின் நடிப்பு மற்றும் இளையராஜாவின் பின்னணி இசை குறித்து தனுஷ் தனது பாராட்டுகளைப் பதிவு செய்துள்ளார்.
1990களின் மதுரையை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், சனாந்த், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜின் 10வது திரைப்படமான ‘டோரதி’, டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றது. படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
படம் வெளியாவதற்கு முன்பு நடிகர் தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் ‘டோரதி’ திரைப்படத்தைப் பாராட்டியுள்ளார். துணிச்சலான மற்றும் நெஞ்சைத் தொடும் கதைக்களம், எதார்த்தமான மற்றும் தீவிரமான உணர்வுகள் என படத்தைப் பாராட்டிய அவர், படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு நடிகரும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இளையராஜாவின் பின்னணி இசை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் இருப்பதாகவும், அது ஒரு ‘ருத்ரதாண்டவம்’ போன்ற இசை அனுபவத்தை வழங்குவதாகவும் தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக, ‘டோரதி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தனது நண்பர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் தனுஷ் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
