புகைப்படம் எடுக்க வந்த ரசிகர்.. ரச்சிதா ராமுக்கு நடந்த எதிர்பாராத சம்பவம்!
கன்னட திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வரும் ரச்சிதா ராம், சமீபத்தில் தனது 34-வது பிறந்தநாளை ரசிகர்களுடன் கொண்டாடினார். பெங்களூருவில் உள்ள அவரது இல்லம் முன்பு திரண்ட ரசிகர்களை சந்தித்த அவர், அவர்களுடன் செல்ஃபி மற்றும் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார். இந்த சந்திப்பின்போது நடந்த எதிர்பாராத சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
ரச்சிதா ராம் ஒவ்வொரு ரசிகருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது, ஒருவர் அவருடன் செல்ஃபி எடுத்துள்ளார். புகைப்படம் எடுத்துக்கொண்ட பின்னர் திடீரென ரச்சிதா ராமின் கன்னத்தை பிடித்து கிள்ளிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். எதிர்பாராத இந்த செயலால் ரச்சிதா ராம் ஒரு கணம் அதிர்ச்சியடைந்தார். இருப்பினும், பின்னர் சிரித்தபடியே அந்த சம்பவத்தை கடந்து சென்றார். இந்த காட்சி தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, ரசிகர்களின் செயல் குறித்து இணையத்தில் பல்வேறு கருத்துகள் எழுந்தன. சிலர் ரச்சிதா ராம் அந்த சூழ்நிலையை அமைதியாக கையாண்டதை பாராட்டினர். அதே நேரத்தில், பிரபலமாக இருந்தாலும் ஒருவரின் தனிப்பட்ட எல்லையை மதிக்க வேண்டும் என்றும் பலர் கருத்து தெரிவித்தனர்.
இதற்கிடையே, இந்த சம்பவம் குறித்து ரச்சிதா ராமே விளக்கம் அளித்துள்ளார். ரசிகர் தனது கன்னத்தை கிள்ளியதில் தவறான நோக்கம் எதுவும் இல்லை என்றும், அதை ரசிகரின் அன்பின் வெளிப்பாடாகவே தான் பார்த்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஒருவேளை அது தவறான தொடுதலாக இருந்திருந்தால், அப்போதே கண்டித்திருப்பேன் என்றும் ரச்சிதா ராம் கூறியுள்ளார்.
மேலும், தன்னுடைய நண்பர்கள் இந்த சம்பவம் குறித்து கோபம் வரவில்லையா என்று கேட்டதாகவும், ஆனால் ரசிகர் தன் மீது வைத்திருந்த அன்பை மட்டுமே தான் பார்த்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் இந்த சம்பவத்தை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
ரச்சிதா ராம் தற்போது தமிழ் ரசிகர்களிடையேயும் நன்கு அறிமுகமான முகமாக உள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர், அந்தப் படத்தில் நடித்த கதாபாத்திரம் மூலம் கவனம் பெற்றார்.
இந்நிலையில், பிறந்தநாள் சந்திப்பில் ரசிகர் செய்த இந்த எதிர்பாராத செயலும், அதற்கு ரச்சிதா ராம் அளித்த பதிலும் தற்போது இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.
