செய்திகள்

ரேஷன் கார்டுக்காக வைக்கப்பட்ட பெயர்.. இன்று சினிமாவில் பிரபலமான சுந்தர்ராஜன்!

ரேஷன் கார்டுக்காக வைக்கப்பட்ட பெயர்.. இன்று சினிமாவில் பிரபலமான சுந்தர்ராஜன்!

தமிழ் சினிமாவில் இயக்குநராகவும், நடிகராகவும் தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர் ஆர். சுந்தர்ராஜன். பயணங்கள் முடிவதில்லை திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர், தொடர்ந்து வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோயில் கிழக்காலே, மெல்ல திறந்தது கதவு, ராஜாதி ராஜா உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில், தனது பெயருக்குப் பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான சம்பவத்தை சுந்தர்ராஜன் சமீபத்திய பேச்சில் பகிர்ந்துள்ளார்.

1951 ஜனவரி 9-ம் தேதி தான் பிறந்ததாகக் கூறிய அவர், பிறந்து நான்கு மாதங்கள் ஆகியும் தனக்கு பெயர் வைக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். அந்தக் காலத்தில் குழந்தைக்கு பெயர் வைப்பது குடும்ப விழாவாகவே நடத்தப்பட்டதாகவும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

நான்கு மாத குழந்தையாக இருந்தபோது, தனது தாயுடன் ரேஷன் கார்டு வாங்கச் சென்றுள்ளார் சுந்தர்ராஜன். அப்போது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை அதிகாரி கேட்டபோது, சுந்தர்ராஜனுக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை என அவரது தாய் கூறியுள்ளார்.

ஆனால், பெயர் இல்லாமல் ரேஷன் கார்டு வழங்க முடியாது என அதிகாரி தெரிவித்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக சுந்தர்ராஜன் கூறியுள்ளார்.

அப்போது அங்கு இருந்த ரேஷன் கடைக்காரர், “இப்போதைக்கு சுந்தர்ராஜன் என்று பெயர் எழுதிக்கொள்வோம்” எனக் கூறியுள்ளார். மேலும், யாராவது சுந்தர்ராஜன் வீட்டில் இருக்கிறாரா என்று கேட்டால் இருக்கிறார் என்று சொல்லுங்கள் என்றும் அவர் தெரிவித்ததாக சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

அப்படி ரேஷன் கார்டுக்காக தற்காலிகமாக வைக்கப்பட்ட அந்தப் பெயரே பின்னர் அவரது நிரந்தரப் பெயராகிவிட்டது. நாள், நட்சத்திரம், ஜாதகம் பார்த்து பெயர் வைக்கும் இன்றைய காலத்துடன் ஒப்பிட்டு, தனது பெயர் வைக்கப்பட்ட விதத்தையும் சுந்தர்ராஜன் சுவாரஸ்யமாகப் பகிர்ந்துள்ளார்.

ரேஷன் கார்டுக்காக தற்காலிகமாக வைக்கப்பட்ட பெயர்.. பின்னாளில் தமிழ் சினிமாவில் பிரபலமான பெயராக மாறியது என்பது சுந்தர்ராஜனின் வாழ்க்கையில் சுவாரஸ்யமான திருப்பமாக அமைந்துள்ளது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *