அஜித்தின் மறுபக்கம்.. ரேஸிங் பயணத்தை சொல்லும் ‘கிளாடியேட்டர்ஸ்’!
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராகவும், அதிக ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட நட்சத்திரமாகவும் வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் கடந்த 2025-ஆம் ஆண்டு வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், வசூலிலும் சாதனை படைத்தது.
நடிப்பைத் தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீது அதிக ஆர்வம் கொண்ட அஜித் குமார், சிறு வயது முதலே கார் மற்றும் பைக் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக திரைப்படப் பணிகளுக்கு இடையே தனது பெரும்பாலான நேரத்தை கார் பந்தயத்திற்காகவும் செலவிட்டு வருகிறார்.
துபாய், அபுதாபி உள்ளிட்ட சர்வதேச களங்களிலும், ஐரோப்பிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் தொடர்களான Asian Le Mans மற்றும் 24H Series போட்டிகளிலும் அஜித் பங்கேற்றுள்ளார். மேலும், பிலிப் சாரியட் மோட்டார் ஸ்போர்ட் சார்பில் இத்தாலியின் வெனிஸ் நகரில் நடைபெற்ற நிகழ்வில், இந்த ஆண்டுக்கான ‘ஜென்டில்மேன் ஓட்டுநர் விருது’ அவருக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், அஜித்தின் சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணத்தை மையமாகக் கொண்டு ‘கிளாடியேட்டர்ஸ் – In Pursuit of Challenges’ என்ற ஆவணப்படம் உருவாகியுள்ளது. இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
அஜித்தின் திரையுலக பயணத்திற்கு அப்பாற்பட்ட மோட்டார் ஸ்போர்ட்ஸ் அனுபவங்களை பதிவு செய்துள்ள இந்த ஆவணப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில், ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படத்தின் சிறப்பு ட்ரெய்லர் இன்று மாலை 6.40 மணிக்கு திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், ட்ரெய்லருக்கு மத்திய தணிக்கை வாரியம் U/A சான்றிதழ் வழங்கியுள்ளது.
இதனிடையே, ‘கிளாடியேட்டர்ஸ்’ ட்ரெய்லர் வெளியாகும் திரையரங்குகளின் பட்டியலையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

