ஹீரோவாக களமிறங்கும் லியோ சிவக்குமார்.. சிம்பு வெளியிட்ட படத்தின் டிரெய்லர்!
திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடித்துள்ள ‘டெலிவரி பாய்’ திரைப்படத்தின் டிரெய்லரை நடிகர் சிலம்பரசன் (சிம்பு) வெளியிட்டுள்ளார். காதல், குடும்ப உணர்வுகள், ஆக்ஷன் மற்றும் காமெடி எனப் பல அம்சங்களுடன் வெளியாகியுள்ள இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இயக்குநர் சுசீந்திரனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய நானி, இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். லியோ சிவக்குமாருக்கு ஜோடியாக பிரிகிடா நடித்துள்ளார். மேலும், ராதிகா சரத்குமார், போஸ் வெங்கட், காளி வெங்கட், துஷ்யந்த் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார்.
அம்மா – மகன் பாசத்தை மையமாகக் கொண்டு தொடங்கும் டிரெய்லர், பின்னர் எதிர்பாராத திருப்பங்களுடன் நகர்கிறது. சிறுவயது முதலே ஒன்றாக வளர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் ஏழு பேரின் பின்னணியில், அவர்களிடம் சிக்கிக்கொள்ளும் கதாநாயகன் சந்திக்கும் பிரச்சனைகள் என்னென்ன என்பதற்கான காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
குடும்பப் பாசம், காதல், நகைச்சுவை ஆகியவற்றுடன் அதிரடி காட்சிகளும் இடம்பெற்றிருப்பதால், இப்படம் ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
‘டெலிவரி பாய்’ திரைப்படம் வரும் அக்டோபர் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சிம்பு வெளியிட்டுள்ள இந்த டிரெய்லர், படத்தின் மீதான ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.
