செய்திகள்

கிறிஸ்துமஸை வரவேற்க 1,000 கிலோ கேக் கலவை! கோவை ரெசிடென்சி ஹோட்டலில் கோலாகல நிகழ்ச்சி!

கிறிஸ்துமஸை வரவேற்க 1,000 கிலோ கேக் கலவை! கோவை ரெசிடென்சி ஹோட்டலில் கோலாகல நிகழ்ச்சி!கிறிஸ்துமஸை வரவேற்க 1,000 கிலோ கேக் கலவை! கோவை ரெசிடென்சி ஹோட்டலில் கோலாகல நிகழ்ச்சி!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள தி ரெசிடென்சி டவர்ஸ் ஹோட்டலில் வருடாந்திர கிறிஸ்துமஸ் பழ கேக் கலவை நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதில் சுமார் 1,000 கிலோ எடையிலான கேக் தயாரிப்புப் பொருட்கள் ஒன்றாகக் கலக்கப்பட்டன.

2026-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஹோட்டலின் சமையல் கலைஞர்கள், ஊழியர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். கிறிஸ்துமஸ் பிளம் கேக்குகளுக்கான பிரத்யேகக் கலவையைத் தயாரிப்பதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.

இதற்காக பாதாம், வால்நட், கிரான்பெர்ரி, உலர் திராட்சை, அத்திப்பழம், கருப்பு திராட்சை, சர்க்கரையில் பதப்படுத்தப்பட்ட இஞ்சி உள்ளிட்ட பல்வேறு உலர் பழங்கள் பயன்படுத்தப்பட்டன. இவற்றுடன் உயர்தர மதுபானங்கள், டெமராரா சர்க்கரை மற்றும் நறுமண மசாலாப் பொருட்களும் சேர்க்கப்பட்டு கலவை தயாரிக்கப்பட்டது. இதன் மூலம் கேக்குகளுக்குத் தனித்துவமான சுவையும் நறுமணமும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கலவை உரிய காலம் வரை பக்குவப்படுத்தப்பட்ட பின்னர், ஹோட்டலின் பிரத்யேக கிறிஸ்துமஸ் பிளம் கேக்குகளாகத் தயாரிக்கப்பட உள்ளது. பண்டிகைக் காலத்தின் மகிழ்ச்சி, அன்பு மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

இதுகுறித்துப் பேசிய தி ரெசிடென்சி டவர்ஸ் ஹோட்டலின் பொது மேலாளர் அமர்நாத், ஆண்டுதோறும் நடைபெறும் கேக் கலவை நிகழ்ச்சி கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் தொடக்கத்தைக் குறிப்பதாகத் தெரிவித்தார். ஊழியர்கள் மற்றும் விருந்தினர்கள் ஒன்றிணைந்து கேக் தயாரிக்கும் கலையின் மூலம் பண்டிகை மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வது சிறப்பான அனுபவம் என்றும் கூறினார்.

மேலும், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு அன்பையும் மகிழ்ச்சியையும் வழங்கும் வகையில் பல்வேறு சிறப்பு கேக் வகைகள் தயாரிக்கப்பட உள்ளதாகவும், ஹோட்டலின் பிரத்யேக பிளம் கேக்குகள் பண்டிகைக் காலத்தில் விற்பனைக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.