செய்திகள்

தாய்மார்களுக்கு பட்டுப்புடவை வழங்கும் திட்டம்! ராகவா லாரன்ஸ் நெகிழ்ச்சி அறிவிப்பு!

தாய்மார்களுக்கு பட்டுப்புடவை வழங்கும் திட்டம்! ராகவா லாரன்ஸ் நெகிழ்ச்சி அறிவிப்பு!

டிகரும் நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ், தனது அறக்கட்டளையின் 20 ஆண்டுகால பயணத்தை முன்னிட்டு, தாய்மார்களுக்கு பட்டுப்புடவை வழங்கும் புதிய திட்டத்தைத் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தனது பதிவில், 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட லாரன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் மூலம் ஏராளமானோருக்கு உதவி செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டபோது குழந்தைகளாக இருந்த பலர் தற்போது 20 வயதை எட்டியுள்ளதாகவும், சிலர் வேலைக்குச் செல்வதாகவும், இன்னும் சிலர் கல்லூரியில் படித்து வருவதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

தனது ஆரம்பகாலத்தில் பொருளாதார நெருக்கடியில் இருந்தபோது பலரும் தனக்கு உதவியதாகவும், பின்னர் நல்ல நிலைக்கு வந்ததும் தன்னால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்குச் செய்யத் தொடங்கியதாகவும் அவர் பகிர்ந்துள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கு நடனம் கற்றுக்கொடுப்பது, இதய அறுவை சிகிச்சைக்குப் பொருளாதார உதவி வழங்குவது, விவசாயிகளுக்கு டிராக்டர் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த 20 ஆண்டுகாலப் பயணத்தில் தனக்கு ஒரு முக்கியமான ஆசை இருந்ததாகக் குறிப்பிட்ட ராகவா லாரன்ஸ், அதற்குக் காரணமான ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தையும் பகிர்ந்துள்ளார்.

விவசாயி ஒருவருக்கு டிராக்டர் வழங்கச் சென்றபோது, அங்கு வந்த தாய் ஒருவர் தன்னிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். அந்தக் கடிதத்தில், பல்வேறு நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் தங்களுக்கு அணிந்துகொள்ள பட்டுப்புடவை இல்லை என்றும், தனக்கும் ஒரு பட்டுப்புடவை வாங்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை என்றும் அந்தத் தாய் குறிப்பிட்டிருந்ததாகக் கூறியுள்ளார்.

இந்தக் கடிதத்தைப் படித்ததும் மனம் நெகிழ்ந்ததாகக் குறிப்பிட்ட அவர், அந்தத் தாயின் ஆசையை நிறைவேற்றும் வகையில், இனி தாய்மார்களுக்கு பட்டுப்புடவை வழங்கும் திட்டத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே பல்வேறு சமூக நலப்பணிகளில் ஈடுபட்டு வரும் ராகவா லாரன்ஸின் இந்த அறிவிப்பு, அவரது அடுத்தகட்ட சேவைக்கு ஒரு புதிய தொடக்கமாக அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *