தேவா இசையில் பல ஹிட் பாடல்களைப் பாடிய கிருஷ்ணராஜ் காலமானார்!
தமிழ்த் திரையுலகில் தனது தனித்துவமான குரலால் ரசிகர்களைக் கவர்ந்த பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ், உடல்நலக் குறைவு காரணமாக தனது 75-வது வயதில் சென்னையில் காலமானார். இவரது மறைவு தமிழ் இசை ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இசையமைப்பாளர் தேவாவின் இசையில் பல பிரபலமான பாடல்களைப் பாடி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் கிருஷ்ணராஜ்.
தமிழ்த் திரைப்படங்களில் 300-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள கிருஷ்ணராஜ், 1990-களில் தனது பாடல்களின் மூலம் அதிக கவனம் பெற்றார். இசையமைப்பாளர் தேவாவின் இசையில் வெளியான பல பாடல்கள் இவருக்குப் பெரும் புகழைத் தேடித்தந்தன. குறிப்பாக, ‘பொற்காலம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’ பாடல் இன்றளவும் ரசிகர்களால் விரும்பிக் கேட்கப்படும் பாடல்களில் ஒன்றாக உள்ளது.
இதுமட்டுமின்றி, ‘வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா’, ‘திருப்பதி ஏழுமலை வெங்கடேசா’, ‘காத்தடிக்குது காத்தடிக்குது’, ‘நலம் நலமறிய ஆவல்’ உள்ளிட்ட பல பாடல்களிலும் தனது குரல் மூலம் தனி அடையாளத்தை உருவாக்கினார். மேலும், ‘பருத்திவீரன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அய்யயோ’ பாடலும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. ‘கழுகு’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஆம்பளைக்கும் பொம்பளைக்கும்’ பாடலும் அவரது குறிப்பிடத்தக்க பாடல்களில் ஒன்றாகும்.
‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’ பாடலுக்காக கிருஷ்ணராஜுக்கு மாநில அரசின் திரைப்பட விருதும் கிடைத்தது. பல்வேறு இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடியுள்ள இவர், தனது நீண்ட இசைப் பயணத்தில் பல்வேறு வகையான பாடல்களை வழங்கியுள்ளார்.
சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நாலு நிமிஷம்’ பாடல், அவரது கடைசிப் படைப்பாகக் குறிப்பிடப்படுகிறது. பல தலைமுறை ரசிகர்களின் நினைவுகளில் தனது பாடல்கள் மூலம் வாழும் கிருஷ்ணராஜின் மறைவு, தமிழ்த் திரையிசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாக அமைந்துள்ளது.
