கிறிஸ்துமஸ் ரிலீஸுக்கு தயாராகும் ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’! வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
‘நாய் சேகர்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் கிஷோர் ராஜ்குமார், தற்போது கதாநாயகனாக நடித்துள்ள ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் மலையாள நடிகை அன்னா பென் கதாநாயகியாக நடித்துள்ளார். காதல் மற்றும் நகைச்சுவையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், வரும் டிசம்பர் 24, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
காதலும் நகைச்சுவையும் கலந்த கதை!
கிஷோர் ராஜ்குமார் இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ள இப்படம், ஜோடிகளுக்கு இடையிலான புரிதல் மற்றும் பொருத்தத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. வழக்கமான காதல் கதைகளிலிருந்து மாறுபட்டு, நகைச்சுவையுடன் குடும்பத்தினர் அனைவரும் ரசிக்கும் வகையில் படத்தை உருவாக்கியுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
இந்தப் படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் இயக்குநர் குறிப்பிட்டுள்ளார். மேலும், படத்தின் படப்பிடிப்பு வெறும் 29 நாட்களில் நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நட்சத்திரப் பட்டாளம்!
அன்னா பென் மற்றும் கிஷோர் ராஜ்குமார் ஆகியோருடன் கே.எஸ். ரவிக்குமார், பொன்வண்ணன், விஜி சந்திரசேகர், சித்தப்பு சரவணன், வினோதினி வைத்தியநாதன், லொள்ளு சபா மனோகர், CWC மோனிஷா பிளெஸ்ஸி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
நாயகன் சதீஷ் நடித்த ‘நாய் சேகர்’ படத்தில் கிஷோர் ராஜ்குமாருடன் இணைந்து பணியாற்றிய ஒளிப்பதிவாளர் பிரவீன் பாலு மற்றும் படத்தொகுப்பாளர் ராம் பாண்டியன் ஆகியோர் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளனர். பிருந்தா மாஸ்டர் நடன அமைப்பையும், ஸ்ரீ சசிகுமார் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர்.
கார்த்திக் ஸ்ரீனிவாஸ் மற்றும் மகாவீர் அசோக் தயாரித்துள்ள இப்படத்தைத் தமிழகத்தில் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ள ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறுமா என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.
