மதுரை-தேனி சாலையில் தொடரும் வி*த்துகள்.. ரேடார் கேமராக்கள் குறித்து ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுவதாகக் கூறப்படும் நிலையில், சாலையில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி வேகக் கண்காணிப்பு கேமராக்கள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய நெடுஞ்சாலைத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரவீன்குமார், சாலை விபத்துகளைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 2018 முதல் 2026 வரையிலான 8 ஆண்டுகளில் மதுரை-தேனி சாலையில் 463-க்கும் மேற்பட்ட விபத்துகள் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தேனி-உசிலம்பட்டி இடையேயான சுமார் 39 கி.மீ. தூரத்தை சில தனியார் பேருந்துகள் அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட அதிகமாக இயக்குவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலை விபத்துகளைத் தடுக்க குறிப்பிட்ட இடைவெளிகளில் தானியங்கி வேகக் கண்காணிப்பு ரேடார் கேமராக்கள், ஸ்பீட் கன் மற்றும் வாகனங்களின் வேகத்தை காட்டும் டிஸ்ப்ளே ஆகியவற்றை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தனியார் பேருந்துகளில் வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் முறையாக பொருத்தப்பட்டு செயல்படுகின்றனவா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் ஆர். சக்திவேல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மதுரை முதல் தேனி வரையிலான சாலையில் எத்தனை தானியங்கி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறித்து நெடுஞ்சாலைத் துறை அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், மதுரை மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர்களும் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சாலை பாதுகாப்பு தொடர்பான இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை அக்டோபர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
