செய்திகள்

8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.12,000 கல்வி உதவித்தொகை! நவம்பர் 3 கடைசி நாள்!

8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.12,000 கல்வி உதவித்தொகை! நவம்பர் 3 கடைசி நாள்!

தமிழகத்தில் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத்தின் (NMMS) தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 2026–2027 கல்வியாண்டுக்கான இந்தத் தேர்வு டிசம்பர் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை நவம்பர் 3ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த திறமையான மாணவர்கள் தொடர்ந்து கல்வி பயில்வதை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். தேர்வில் தேர்ச்சி பெற்று தகுதிபெறும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 வீதம், அதாவது மாதம் ரூ.1,000 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை விதிமுறைகளுக்கு உட்பட்டு வழங்கப்படும்.

தேர்வில் பங்கேற்க, மாணவர்கள் 7ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கப்படுகிறது. பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.3.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு, அரசு உதவிபெறும் மற்றும் உள்ளாட்சி அமைப்புப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இத்திட்டத்தின் தகுதி விதிமுறைகளைச் சரிபார்த்து விண்ணப்பிக்கலாம்.

தேர்வுக் கட்டணம் ரூ.50 என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் பள்ளித் தலைமை ஆசிரியர் மூலம் விண்ணப்ப நடைமுறைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். தேர்வு வட்டார அளவிலான மையங்களில் நடைபெறும்.

விண்ணப்பம் மற்றும் தேர்வு குறித்த கூடுதல் விவரங்களைத் தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.dge.tn.gov.in/ இல் தெரிந்துகொள்ளலாம். கடைசி நாளான நவம்பர் 3ஆம் தேதிக்கு முன்பாக விண்ணப்பிப்பது அவசியம்.