செய்திகள்

தேனி கிளைச் சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோட்டம் – 4 பேர் கைது!

தேனி கிளைச் சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோட்டம் – 4 பேர் கைது!

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி கிளைச் சிறையிலிருந்து 17 விசாரணைக் கைதிகள் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் 26-ஆம் தேதி இரவு நடைபெற்ற இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தப்பிய கைதிகளைப் பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

சிறையில் ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளில் ஒருவர் வலிப்பு ஏற்பட்டதாகக் கூறியதைத் தொடர்ந்து, அவர்களுக்கு உதவுவதற்காகச் சிறைக் காவலர்கள் அறையைத் திறந்துள்ளனர். அப்போது கைதிகள் காவலர்களைத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் காவலர் தங்கப்பாண்டி தலையில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் சில காவலர்களுக்கும் காயங்கள் ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தப்பியோடிய கைதிகளைப் பிடிக்க 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேனி மற்றும் அண்டை மாவட்டங்களில் வாகனத் தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டு, சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், தப்பியோடிய 17 பேரில் நான்கு பேர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 13 பேரைப் பிடிக்கும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சிறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கைதிகள் தப்பிய சூழ்நிலை குறித்து காவல்துறை உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.